“தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை ஆவணப்படுத்திய ஆளுமை” - யார் இந்த பேராசிரியர் தொ.பரமசிவன்?

“தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை ஆவணப்படுத்திய ஆளுமை” - யார் இந்த பேராசிரியர் தொ.பரமசிவன்?
“தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை ஆவணப்படுத்திய ஆளுமை” - யார் இந்த பேராசிரியர் தொ.பரமசிவன்?
Published on

தமிழ்நாட்டின் பண்பாட்டு ஆய்வுகளின் முன்னோடியாகத் திகழ்ந்த தொ.பரமசிவன் திராவிடக் கருத்துடன் கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர்.

கலாசாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆய்வாளர்கள் பேசுகின்ற தத்துவ மொழியை உடைத்தெறிந்து எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரிய வைத்தவர், தொ.பரமசிவன். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தனது கட்டுரைகள் வாயிலாக ஆவணப்படுத்தியவர், அவர். தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தனைப் பற்றி ஆய்வு செய்யவே பரமசிவன் விரும்பினார். ஆனால், அவரது ஆய்வு நெறியாளர் மு.சண்முகம் பிள்ளை, கோவில் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு கூற, அழகர் கோவிலை தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார், தொ.பரமசிவன்.

அழகர் கோவில் தொடர்பான இவரது ஆய்வு நூல் இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக்கூடிய படைப்பாகும். இவரது முனைவர் பட்ட ஆய்வேடான 'அழகர் கோவில்' ஆலயங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகப் பார்க்கப்படுகிறது. ஆய்வாளர்கள் மட்டுமின்றி அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இது திகழ்கின்றது. இவரது ஆய்வு பாராட்டுப் பெற்றதை அடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகமே அதனை நூலாக வெளியிட்டது.

அழகர் கோவில் நூலுக்குப் பின்னர் வெளியான 'அறியப்படாத தமிழகம்' அவரை தமிழ் பேசும் பகுதிகள் என்றும் அறியப்பட்டவராக்கியது. திராவிட சிந்தனைகளுடன் ஆய்வு முறையை கையாண்ட தொ.பரமசிவன், தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக் கொண்டு வந்தவர். பகுத்தறிவாளர்கள் பக்தியைப் பற்றிப் பேச மாட்டார்கள். பக்தி இலக்கியம் படிக்க மாட்டார்கள். ஆனால், தொ.பரமசிவன் பெரியாரைப் பற்றியும் பேசுவார், பெரியாழ்வாரைப் பற்றியும் பேசுவார். பல்துறை வித்தகர். கடவுள் மறுப்பை மனதில் கொண்டிருந்தாலும் கோவில் குறித்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர், அவர்.

பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், விடு பூக்கள், உரைகல், இந்து தேசியம், மானுட வாசிப்பு, மஞ்சள் மகிமை போன்ற ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் பரமசிவன். அவரது மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கும் ஆய்வு உலகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகின்றது.

பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளராக திகழ்ந்த பேரா.தொ.பரமசிவன் காலமானார். 

நெல்லைச் சேர்ந்தவர் தொ.பரமசிவன், வயது 70. காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் முதுகலை தமிழ் பயின்றவர். மதுரை பல்கலையில் இவரது முனைவர் பட்ட ஆய்வேடான ‛அழகர்கோயில்' ஆய்வுகளுக்கான முன்னோடி நுாலாகும். இளையான்குடி ஜாகிர்உசேன்கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரிகளில் தமிழ்த்துறையில் பணியாற்றியுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவராக 96 முதல் 2008 வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர்.

அறியப்படாத தமிழகம், சமயங்களின் அரசியல், நான் இந்து அல்ல நீங்கள், விடுபூக்கள், பாளையங்கோட்டை, செவ்வி உள்பட 17 நுால்கள் எழுதியுள்ளார். தமிழர்களின் பண்பாடுகள், வாழ்வியல்முறைகள் குறித்த சிறந்த பேச்சாளர். தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்காக நடிகர் கமலஹாசன், இவரது வீட்டிற்கு வந்து ஆலோசனைகள் பெற்றுச்சென்றார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று மாலை காலமானார். இறுதிசடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது. இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், மாசான மணி என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com