செய்தியாளர் சுரேஷ்குமார்
உலகப்பொதுமறையாம் திருக்குறளில்தான் இவர் பேச ஆரம்பிக்கிறார். அதன் பின்னர் திருமூலர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பயணப்பட்டு பாவம், புண்ணியம், கர்மவினை என்று மெல்ல மெல்ல பிற்போக்கு கருத்துகளை நுழைத்து விடுவதில் மிகவும் வல்லமை கொண்ட பேச்சாளராக இருப்பவர் மகா விஷ்ணு. ஒரு மந்திரம் சொன்னால் மழை பெய்யும், ஒரு மந்திரம் சொன்னால் மழை நின்றுவிடும் என்று அள்ளி அள்ளி அளந்துவிடும் இந்த நபர் பள்ளிப்பருவத்தில் இருந்தே மேடைப்பேச்சாளராக இருந்தவர்.
தனியார் தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வந்தபோது இவர் மதுரை மஹா என்று அறியப்பட்டார். அதில் இருந்து அடுத்த கட்டத்துக்கு வளர்வதற்காக ‘நான் செய்த குறும்பு‘ என்ற படத்தை எடுக்கமுயன்றார். அப்போது அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி விபத்தொன்றில் இறந்துவிடவே அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.
அப்போதுதான் ஆன்மிக சொற்பொழிவை கையில் எடுத்து அந்த வழியின் பயணப்பட ஆரம்பித்திருக்கிறார். அப்போது யூட்யூபர் மதுரை மஹா என்ற அடையாளத்தை மஹா விஷ்ணு என்று இவர் மாற்றிக்கொண்டார்.
பரம்பொருள் அறக்கட்டளை என்ற யூட்யூப் சேனலை தொடங்கி ஆன்மிக சொற்பொழிவாற்றத் தொடங்கிய இவர் அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அன்னதானம் வழங்குவதாகக் கூறி நன்கொடை திரட்டியிருக்கிறார்.
2021-ல் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் அமைத்து அன்னதானத்தை வாடிக்கையாக்கிய மகாவிஷ்ணு, அதனை தனது யூட்யூப் சேனலில் பிரபலப்படுத்தி யோகா, ஆன்மிக சொற்பொழிவு என முழுநேர ஆன்மிகவாதியாக அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார். தனது வகுப்பில் பங்கேற்க ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை வசூல் செய்ததாக அவரே சமூக வலைதளங்களில் கூறியிருக்கிறார். இப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்தும் அதிக அளவில் நன்கொடை பெற்று வளர்ந்திருக்கிறார்.
தமிழகத்தில் அவிநாசி பழங்கரை குளத்துப் பாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பரம்பொருள் அறக்கட்டளைக்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிளை அலுவலகங்கள் உள்ளன. பள்ளிகளில் சர்ச்சை கருத்துகளை பேசிய மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று அவரது அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.