சோபியா லூயி என்ற ஆராய்ச்சி மாணவி, நேற்று வரை பெரிய அளவில் பேசப்படாதவர்தான். இன்று அவரது கைது சோபியா யார்..? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
இணையதளத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவின் முழக்கம் ட்ரெண்டிங்கில் உள்ளது. நேற்று வரை சில சமூக ஊடக பதிவுகள், கட்டுரைகளோடு இருந்த சோபியாவின் பெயர் சமூக ஊடகங்களில் தேடப்படும் பெயராக உள்ளது. சோபியா லூயி என்ற 28 வயது ஆராய்ச்சி மாணவியின் பூர்வீகம் தூத்துக்குடி. இவரது தந்தை ஏஏ சாமி, அரசு மருத்துவமனை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துவருகிறார். தாய் மனோகரி, தலைமைச் செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
இந்தத் தம்பதிக்கு சோபியா மற்றும் ஒரு மகன் உள்ளனர். சோபியா, தற்போது கனடாவின் மான்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இயற்பியல் மற்றும் கணிதத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றுள்ள சோபியா, மான்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இணையதளத்தில் ஆங்கிலக் கட்டுரைகளை சோபியா ஏற்கனவே பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, சுற்றுச்சூழல் ரீதியில் பாதிப்புகள் குறித்த விரிவான கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். மேலும், தமிழிசை பயணித்த விமான பயணத்தின்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோபியா, தமிழிசை பயணிக்கும் விமானத்தில் செல்லும்போது எதிர்ப்புக்கோஷம் போடுவது குறித்து பதிவிட்டுள்ளார். மேலும் இவரது ட்விட்டர் பக்கத்திலும், பல்வேறு போராட்டங்கள், கைதுகளுக்கு எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளார்