திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன்தான் கடந்த 5 நாட்களாக தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த நேரத்தில் உண்மையில் யார்தான் இந்த ஜெகத்ரட்சகன் என்ற கேள்வி பலருக்குள்ளும் எழுந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஜெகத்ரட்சகன் அதிமுக எம்பியாக இருந்து கலைஞருக்கு விஸ்வாசியாக மாறியது எப்படி? 40 ஆண்டுகாலமாக அரசியலில் சுற்றிச்சுழலில் இவர் யார் என்ற கேள்விக்கான விடையை தேடி பயணிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.
அரசியலில் அதிமுக, தனிக்கட்சி, திமுக என்று பல பரிமாணங்களை பார்த்துள்ள ஜெகத்ரட்சகன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலிங்கமலை என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம் துளிர்விட, தொழில் தொடங்கும் திட்டத்தையும் வைத்திருந்தார். பின்னாளில் கலைஞருக்கு மிக நெருக்கமாக மாறிப்போன ஜெகத்ரட்சகனை முதன்முதலாக எம்.எல்.ஏவாக உட்கார வைத்தவர் எம்.ஜி.ஆர்தான்.
ஆம் எம்ஜிஆரின் ஆட்சியில்தான் 1980ல் உத்திரமேரூரில் இருந்து எம்.எல்.ஏவாக முதன்முறையாக தேர்வானார் ஜெகத்ரட்சகன். அதனைத் தொடர்ந்து, 1984ல் செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், ஜெயலலிதா எம்.ஆர் வீரப்பனுக்கு இடையே நடந்த கருத்து வேறுபாட்டில் வீரப்பன் பக்கம் நின்றார். அதனைத் தொடர்ந்து திமுகவில் ஐக்கியமானவர் அரக்கோணம் தொகுதியில் 1999 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2004ல் வீர வன்னியர் பேரவை என்ற தனி இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தவர், கருணாநிதியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு 2009ல் திமுகவில் மீண்டும் ஐக்கியமானார். அதே அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு 2009ல் நடந்த தேர்தலில் மீண்டும் எம்பியானார் ஜெகத்ரட்சகன். அவரது வீரவன்னியர் பேரவையும் திமுகவோடு இணைத்துக்கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த நிலையில், 2012 - 2013 வரை மத்திய அமைச்சரவையில் வணிக மற்றும் தொழில்துறை இணையமைச்சராகவும் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, 2014, 2019 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.பியாக இருந்து வருகிறார்.
திமுகவின் முக்கிய முகங்களில் பழுத்த அரசியல்வாதியாக அறியப்படும் ஜெகத்ரட்சகன், கலைஞர் கருணாநிதியின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். “யோவ் ஆழ்வார்.. சாப்புடுய்யா.. புரட்டாசி சனிக்கிழமனா அசைவம் சாப்பிடமாட்டாயா.” என்று கருணாநிதியுடனான நினைவுகளை மேடை ஒன்றில் பகிர்ந்து நெகிழ்ந்து பேசினார் ஜெகத்ரட்சகன். திமுகவின் முக்கிய முகமாக இருந்தால் ஜெகத்ரட்சகன் ஒரு தீவிர பெருமாள் பக்தராகவும் இருந்து வருகிறார்.
தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், நிலக்கரி சுரங்கம் என்று அனைத்து துறைகளிலும் கால்பதித்துள்ள ஜெகத்ரட்சகன், தமிழ் இலக்கியத்திலும் புலிதான். மேடை ஏறி உரையாற்ற தொடங்கினால் தமிழ் அறிஞர்களும் இவரது வார்த்தை மழையை கண்டு வியப்பதுண்டு.
தனது சொத்து மதிப்பு 114 கோடி ரூபாய் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூறியிருந்தார் ஜெகத்ரட்சகன். கடந்த 5 நாட்களாக அவருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.