பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது அவர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார். யார் இந்த ஆம்ஸ்ட்ராங்...அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்துப் பார்ப்போம்.
சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஆம்ஸ்ட்ராங், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவரின் தந்தை திராவிடர் கழகத்தில் முழு நேர ஊழியராக இருந்தவர். தவிர, அவர் வசித்தவந்த பகுதி முழுவதும் திராவிடர் கழகத்தில் இருந்ததால், சிறுவயதில் இருந்தே திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார். அரசியல் ஆர்வமும் இருந்தது. தவிர, அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளாலும் ஈர்க்கபப்டிருந்த ஆம்ஸ்ட்ராங்க், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கினார். அந்த சமயத்தில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தனர். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இடும்பன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. அதன் மூலம், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து 99 வார்டில் போட்டியிட்டு மாநகராட்சியின் கவுன்சிலர் ஆனார். ஆனால், அவர் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆறு மாதத்துக்குப் பிறகு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம் என்கிற விவரம் அவருக்குத் தெரிய வருகிறது.
தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் மானேவைச் சந்திக்கிறார். அங்கு பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகள் பிடித்துப் போகவே, 2007 செப்டம்பர் 24-ம் தேதி கட்சியில் இணைந்தார். அப்போதே மாநிலத் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது.
ஆரம்பத்தில், மேடையில் பேசுவதற்கே சிரமப்பட்ட ஆம்ஸ்ட்ராங், போகப் போக கட்சிக் கொள்கைகளை மேடைகளில் மிகத் தீவிரமாக முழங்கி வந்தார்..அப்போது தொடங்கி தற்போது வரை, 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வருகிறார்.
தவிர, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் பட்டியல் சமூக மக்கள் படும் பிரச்னைகள் குறித்து மிக ஆழமாகவும் தீவிரமாகவும் பேசக்கூடியவர் ஆம்ஸ்ட்ராங். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர்மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், இன்று மாலை, சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து ஆம்ஸ்ட்ராங்கை, ஆறு பேர்கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியுள்ளது. அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.