காட்டெருமை உயிரிழப்பு : யார் காரணம் ?

காட்டெருமை உயிரிழப்பு : யார் காரணம் ?
காட்டெருமை உயிரிழப்பு : யார் காரணம் ?
Published on

சேலம் கன்னங்குறிச்சி அருகே மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டெருமை உயிரிழந்தது. 

கடந்த 20 ஆம் தேதியன்று சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மூக்கனேரி பகுதிக்கு வந்த காட்டெருமை கன்னங்குறிச்சியில் குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டது. எந்த நேரத்திலும் ஊருக்குள் புகுந்து விடும் என்ற அச்சத்திலிருந்தனர் பொதுமக்கள். தகவலறிந்த வனத்துறையினர் காட்டெருமையை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடிப்பது, அதிக ஒலி எழுப்புவது என வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட, அவர்கள் கண்ணெதிரிலேயே இளைஞர்கள் சிலர் காட்டெருமை இருக்கும் திசையில் கற்களை வீசினர். இது முறையற்ற கையாளுதல் என அப்போதே பலர் குற்றம்சாட்டினர். 

இதனால் காட்டெருமை அங்குமிங்குமாக பயந்தோடியது. இதுபோன்ற நடவடிக்கைகள் இரவு வரை தொடர்ந்ததால் அல்லல்பட்டது அப்பாவி காட்டெருமை.. இதற்கு பின்னர் வனத்துறை வல்லுநர் குழு, கால்நடை மருத்துவக்குழு, தீயணைப்புத்துறையினர், வருவாய்துறையினர் என கூட்டு முயற்சியில் காட்டெருமையை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக துப்பாக்கி வாயிலாக மயக்கி ஊசி செலுத்தி காட்டைருமை பிடிக்கப்பட்டது. பிடிப்பட்ட காட்டெருமையை தாறுமாறாக டிராக்டரில் ஏற்றி குரும்பப்பட்டி வனப்பகுதிக்கு கொண்ட சென்ற அதிகாரிகள், அதனை கருங்கற்கள் கொட்டுவது போல கண்மூடித்தனமாக கொட்டிய காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாய் இருந்தது. 

வன உயிரினங்களை காக்க வேண்டும் என வாரவிழா நடத்துவது இதுபோன்று உயிரினங்களை கொல்வதற்குதானா என்றும் ஆரோக்யமாக சுற்றித்திரிந்த ஒரு காட்டெருமையை கூட பத்திரமாக மீட்டு காட்டுக்குள் அனுப்ப முடியவில்லை என்றால் வல்லுநர் குழு எதற்கு என்ற கேள்வியும் வன ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி காட்டெருமை உயிரிழப்புக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற மெத்தன போக்கை தடுக்க முடியும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. சேலத்தில் ஏற்கனவே இதுபோன்ற தவறான கையாளுதல்களால் கருமந்துறையில் யானை மற்றும் அதன் குட்டி, கோயில் யானை ராஜேஸ்வரி என பல ஜீவன்கள் உயிழந்த்து குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com