ஆண்டுதோறும் அவ்வப்போது உருவாகும் புயல்கள் கடலோர மாவட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், உள்மாவட்டங்களில் நல்ல மழையை கொட்டித்தீர்த்து செல்கிறது. சில நேரங்களில் புயல் உருவாகும் என்று வானிலை மையம் கணிக்கும்போது, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து நிம்மதிப்பெருமூச்சும் விடவைக்கிறது புயல் சின்னங்கள்.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும் பட்சத்தில் அவற்றை எளிதில் வேறுபடுத்திப் பார்க்கவும், புயல்களின் தன்மை, அதன் தாக்கத்தை மக்களுக்கு எளிதாக கடத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் பெயர் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் புயல்களுக்கு பெயர் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை பல மேலைநாடுகளில் ஆண்டாண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 2004-ம் ஆண்டுதான் இந்த நடைமுறை தொடங்கியது. உலக சுகாதார அமைப்பைப்போலவே வானிலை குறித்த ஆய்வுகளுக்காக 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் உலக வானிலை மையம். நடப்பு ஆண்டு கணக்குப்படி இந்த மையத்தில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் உள்ள நாடுகளை 6 மண்டலங்களாக பிரித்துள்ள நிலையில், புயலுக்கு பெயர் வைக்கும் அதிகாரமும் அந்த மண்டலத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் வரும் நிலையில், அதன் தலைமையகம் இந்தியாவில் டெல்லியில்தான் இருக்கிறது. இந்த மண்டலத்தில் இருக்கும் 13 நாடுகளின் பரிந்துரைகளின்படி உருவாகும் புயல்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2020ம் ஆண்டு வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இருக்கும் 13 நாடுகளும் தலா 13 பெயர்களை பரிந்துரை செய்துள்ளன. இதில், அடுத்து உருவாகக்கூடிய 150 புயல்களுக்கான பெயர்கள் தயாராக இருக்கின்றன.
ஒவ்வொரு புயல்களுக்கும் ஒவ்வொரு நாடுகளும் பெயரை பரிந்துரை செய்துவரும் நிலையில், தற்போது உருவாக உள்ள புயலுக்கான பெயரை மியான்மர் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்று புயலுக்கு பெயர் வைக்கும்போது, அந்த எந்த மதத்தையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதும் நடைமுறையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து: யுவபுருஷ்