’’2021 முடிவதற்குள் உலக மக்கள் தொகையில் குறைந்தது 20% பேருக்காவது தடுப்பூசி கிடைத்திருக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது. இப்போது உள்ள நிலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கலாம்’’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனிடம், உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா இன்னும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்துக் கொண்டுள்ளபோது, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் நிலை எப்படி உள்ளது? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சவுமியா, ‘’பெருந்தொற்று என்பது நீண்ட இடைவெளிக்கு பிறகு நாம் சந்திக்கும் ஒன்று. பெரும்பாலான வெளிநாடுகளில் இதுபோன்ற பெருந்தொற்று அனுபவம் இருந்ததால், அவர்கள் ஆரம்பத்திலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்துவந்தனர். இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், போதுமான சோதனை வசதிகள் இல்லாததால் தொற்று பரவுதல் அதிகமானது. ஆனால் செப்டம்பருக்கு பிறகு தொற்றுநோய் பரவல் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் விதிமுறைகள் கடினமாக இருந்ததால், தொற்று குறைந்தது. ஆனால் மக்கள் சுற்றுலா, விடுதிகள் என வெளியே சென்றதால் தற்போது அதிகரித்து வருகிறது.எனவே நமது நாட்டை பொருத்தவரை குறைந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது; அதேசமயம் இரண்டாம் அலைக்கும் வாய்ப்பிருக்கிறது.
எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபடித்தல் அவசியம். அரசும் சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலை தொடரவேண்டும். இதுதவிர மற்ற உடல்நல குறைபாடுகளையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், 100 நாடுகளுக்கும் அதிகமாக பங்கேற்றது. வளர்ந்துவரும் நாடுகளில் கொரோனா தவிர, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், கர்ப்பிணி பாதுகாப்பு, மனநலம், கேன்சர், காசநோய் உட்பட மற்ற அனைத்து சுகாதார செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வருடத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், மற்ற இறப்புகள் அனைத்தும் அடுத்த வருட சர்வேயில்தான் தெரியவரும். அத்தியாவசிய சுகாதார சேவைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது’’ என்று கூறினார்.
தொடர்ந்து, உலகளவில் பல தடுப்பூசிகள் தயாராகி வருகிறது. இந்திய சூழலுக்கு ஏற்றவகையில் இருக்கும் தடுப்பூசி எது? என்று கேட்கப்பட்டது.
அதற்கு, ‘’சில நாடுகள் தயாரிக்கும் தடுப்பூசிகளை அதிக குளிர்நிலையில்தான் வைக்கமுடியும். அதேசமயம் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நமது காலநிலைக்கு ஏற்றவாறு இருக்கும். ஆனால் எப்படியும் சோதனைகள் முடிந்து மற்ற தடுப்பூசிகள் வர 6-8 மாதங்கள் ஆகலாம். ஏனென்றால், அதிக வருமானம் வரக்கூடிய நாடுகள் ஏற்கெனவே தடுப்பூசிகளை வாங்கிவிட்டது. எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசியானது சரிசமமாக கிடைக்கவேண்டும் என்று கூறியுள்ளது. 2021 முடிவதற்குள் உலக மக்கள் தொகையில் குறைந்தது 20% பேருக்காவது தடுப்பூசி கிடைத்திருக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது.
100% உலகம் முழுவதும் தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்பதைக் காட்டிலும் குறைந்தது 60-70% பேருக்கு தடுப்பூசி போடவேண்டும். அப்போது ‘குழு எதிர்ப்பாற்றல்’ என்பது அதிகரித்துவிடும். எனவே வைரஸ் அவ்வளவு எளிதில் பரவாது’’ என்றார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி கேட்டபோது, ‘’பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால் குறிப்பாக ஏழைக்குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி, மதிய உணவு, ஊட்டச்சத்து போன்றவை போதுமாக கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கை இன்னும் குறையும்போது பள்ளிகளை வழிகாட்டுதல்களின்படி திறக்கலாம். இப்போது உள்ள நிலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கலாம்’’ என்றார்.