தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் தமிழ்நாட்டின் இருபெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றுமான அதிமுக, இன்றோடு 53-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. கட்சி தொடங்கப்பட்ட இந்த 52 ஆண்டுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த பெருமை அதிமுகவையே சேரும். அதேவேளை, மத்திய அமைச்சரவையில் மிகக் குறுகிய காலம், ஒருசிலரே அமைச்சர் பொறுப்பை வகித்திருக்கின்றனர். அதற்கான காரணம் என்ன?. விரிவாகப் பார்ப்போம்.
அதிமுக, எம்.ஜி.ஆர் தலைமையில் 1972 அக்டோபர் 17-ம் தேதி இதேநாளில்தான் தொடங்கப்பட்டது. அந்தக் கட்சி முதலில் சந்தித்த தேர்தல் என்பதே நாடாளுமன்றத் தேர்தல்தான். ஆனால், இடைத்தேர்தல்.., கட்சி தொடங்கிய ஆறு மாதத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வந்தது. அதிமுக சார்பில் அப்போது மாயத்தேவர் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 1977-ல் நடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது அதிமுக. கூட்டணி ஒட்டுமொத்தமாக, 34 இடங்களைக் கைப்பற்றியது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவும் 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அப்போது மத்தியில் ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது. அதனால், முதலில் அந்த அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு அமையவில்லை. ஆனால், மத்தியில் சரண்சிங் அமைச்சரவை 1979-ல் உருவானபோது, அதிமுகவின் ராஜ்யசபா எம்.பியான சத்தியவாணிமுத்து மற்றும் பாண்டிச்சேரி மக்களவை எம்.பி அரவிந்த பால பஜனோர் இருவரும் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். சத்தியவாணி முத்து சமூக நலத்துறை அமைச்சராகவும் பால பஜனோர் பெட்ரோலியத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தனர். தமிழ்நாட்டில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற காங்கிரசல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களே.
அதேவேளை, 1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தது. அதிமுக, ஜனதா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதிமுக சிவகாசி மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் என இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தவிர, மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சி அமைய அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு உருவாகவில்லை. 1984 தேர்தலில் கூட்டணி அப்படியே மாறிப்போனது, அதிமுக காங்கிரஸ் கூட்டணி உருவானது. அப்போது தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 37 இடங்களைக் கைப்பற்றியது அதிமுக கூட்டணி. அதிமுக மட்டும் 12 இடங்களில் போட்டியிட்டு 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியே 400-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அப்போது கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
தொடர்ந்து, 1989 தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக மட்டும் 11 இடங்களில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால், மத்தியில், ஜனதா தள கூட்டணி ஆட்சியே அமைந்தது. தொடர்ந்து, 1991 தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது அதிமுக. ஒட்டுமொத்தமாக 39 தொகுதிகளையும் இந்தக் கூட்டணி கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி 232 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற்றனர். தொடர்ந்து, 1996 தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
1998 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பிடித்தது அதிமுக. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 23 இடங்களில் போட்டியிட்ட திமுக 18 இடங்களில் வெற்றிபெற்றது. அப்போது அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக இடம்பெற்றது. சேடப்பட்டி முத்தையா மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் தம்பிதுரை மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். சேடப்பட்டி முத்தையா வெறும் இருபது நாள்கள் மட்டுமே அந்தப் பொறுப்பில் இருந்தார். வழக்கு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினமா செய்யவேண்டிய சூழல் உருவானது. அதற்குப் பின்னர் அவருடைய துறையையும் தம்பிதுரை கவனித்துக்கொண்டார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை. 2009 தேர்தலில் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் அதிமுக மட்டும் ஒன்பது இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், அப்போது, காங்கிரஸ் கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைத்தது. அதற்கடுத்து 2014 தேர்தலில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தது அதிமுக. தொடர்ந்து, 2019 தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான், அதிமுக இடம் பிடித்தது. தமிழ்நாட்டில் அந்தக்கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்த ஒரு உறுப்பினரும் தேனியில் போட்டியிட்ட அதிமுகவின் ரவீந்திரநாத்குமார்தான்.
மத்தியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜக அமைச்சரவையில் இடமளித்திருந்தபோதும், அதிமுக இடம் பெறவில்லை. அதற்கு பல அரசியல் காரணங்களும் இருக்கின்றன. தொடர்ந்து, 2024 தேர்தலில் அதிமுக தனித்துக் களமிறங்கி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. ஆகமொத்தம், 52 ஆண்டுகால வரலாற்றில் நான்குபேர் மட்டுமே மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கின்றனர்.
அதேவேளை திமுகவை எடுத்துக்கொண்டால், 1996-ல் ஆரம்பித்து 2013 வரை 17 ஆண்டுகள் 15-க்கும் மேற்பட்டோர் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்திருக்கின்றனர். ஏன் பாட்டாளி மக்கள் கட்சிகூட, பத்தாண்டுகளுக்கும் அதிகமாக ஆறு பேர், அதாவது அதிமுகவைவிட அதிக காலம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.