மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 4 இடங்களை ஆளும் திமுக கூட்டணி பெறும் நிலையில், 3 திமுக வேட்பாளர்கள் பெயர்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓர் இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் இரு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம் என்ற நிலையில் கட்சியின் உயர்நிலை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தென் தமிழகத்திற்கு இம்முறை முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், சமுதாய அடிப்படையிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, வேட்பாளரை இறுதி செய்ய தயாராக இருந்தாலும் தற்போது வரை ஓபிஎஸ் இறுதி செய்யாமல் உள்ளதால் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது.