மதுரை அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், மனமகிழ் மன்றங்களை அடைக்க அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாநகரத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் நடைபெறும் நிலையில் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் , மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 13 மதுக்கடைகள், 4 மனமகிழ் மன்றங்களை அடைக்க அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அவனியாபுரத்தில் வரும் 15 ஆம் தேதியும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும் , 17 ஆம் தேதி அலங்கா நல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. எனவே இப்பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க நேற்றைய தினமே மதுரை மாநகர காவல்துறை மிக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
அதன்படி ,” காளைகளை கொண்டுவருவோர், மாடுப்பிடி வீரர்கள் உள்ளிட்டோர் மது அருந்தி இருக்க கூடாது என்று தெரிவித்திருந்தது.” இந்நிலையில் இன்று காலை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.