செய்தியாளர் - கார்த்திகா செல்வன்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளும் இணைந்து தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. வெற்றி பெற்று எம்.பியாக தேர்வாகியுள்ள 40 பேரில் 26 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. அதாவது எம். பியாக தேர்வாகியுள்ள 65 சதவிகிதம் பேர் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள். அதில்,
17 வழக்குகளுடன் திமுக எம். பி. தங்க தமிழ்ச்செல்வன் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் 11 வழக்குகளுடன் கார்த்தி சிதம்பரம் உள்ளார். மற்றொரு காங்கிரஸ் எம்.பி. வழக்கறிஞர் சுதா மீது 10 வழக்குகள் உள்ளன. 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 9 வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார். கன்னியாகுமரியில் வென்ற விஜய் வசந்த், 8 வழக்குகளுடன் இந்த பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார்.
வெற்றிப்பெற்றவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களாகதான் உள்ளனர். வேட்பாளர்கள் பட்டியலில் கட்சிகள் அடிப்படையில், 125 வழக்குகளுடன் பாஜக முதலிடத்தில் உள்ளது. 50 வழக்குகளுடன் திமுகவும், 32 வழக்குகளுடன் காங்கிரஸும், 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் உள்ளன. 23 வழக்குகளுடன் அதிமுகவும், 20 வழக்குகளுடன் பாமகவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.