கடந்த சில தினங்களாக புயல் குறித்த பேச்சு தமிழகத்தில் இருந்து வந்தது. வழக்கம் போல் சீரான மழைப்பொழிவு இருக்கும், காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 36 மணி நேரமாக பெய்து வரும் மழையை நிச்சயம் பலரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்தது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வழக்கமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான சில பகுதிகளில்தான் அதிக அளவில் தண்ணீர் தேங்கும். ஆனால், இந்த முறை பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ச்சியாக அடர்த்தியாக மழை பெய்தது. இதற்கு முக்கியமான காரணம் என்றால் தேங்கிய மழைநீரானது பெரிய அளவில் வடியவில்லை என்ற உண்மையும் இங்கே பேசப்பட வேண்டியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக கால்வாய்கள் மற்றும் ஆறுகள் வழியாக மழைநீர் கடலில் கலப்பது இந்த முறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கல் தொடர்பாக புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம், நெறியாளர் தரப்பில் “புயலின் தன்மையை எப்படி புரிந்து கொண்டது அரசு? புயலின் தன்மை, மழை இதையெல்லாம் கணிக்க முடிந்ததா? அல்லது கணிப்பை கடந்து நடக்கிறதா?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு ராதாகிருஷ்ணன், “புயலை சரியாகத்தான் கணித்து இருந்தோம். சென்னைக்கு பக்கத்தில் வந்து மேற்கு திசையில், வடமேற்கு திசையில் செல்லும் என்று சொல்லப்பட்டது. இதில் என்ன சவால் வந்தது என்றால், சென்னை பக்கத்தில் வரும் பொழுது, புயலானது மிகவும் மெதுவாக 10 கிமீ வேகத்தில் 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரம் வரை மையம் கொண்டிருந்ததால் கடல் சீற்றம் ஏற்பட்டது. அத்துடன், மேகக்கூட்டம் சென்னையில் மேல் பகுதியில் முழுவதுமாக சூழ்ந்தது.
தற்போது கூட வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்த தகவலின்படி, புயலானது ஸ்ரீஹரிகோட்டாவை நோக்கி நகர்ந்தாலும் சென்னையில் நள்ளிரவு 12 மணி அல்லது நாளை அதிகாலை 2 மணியளவிலும் மழைப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ளார். கணிப்பு சரியாக இருந்தாலும் கடல் சீற்றம் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
நமக்கு நான்கு வழிகளில் மழைநீர் வெளியேற வாய்ப்புள்ள பகுதிகளில் மழைநீர் போக முடியாத சவால் இன்று இருந்தது. எல்லா இடத்திலும் பரவலாக அதிக கனமழை பெய்தது இந்தமுறைதான். இதற்கு முன்பு குறிப்பிட்ட சில பகுதிகளில் தான் மழை அதிக அளவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.