பழந்தமிழர் வாழ்வியலை பறைசாற்றும் வகையில் குற்றாலத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் இன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. அருங்காட்சியகம் பொலிவு பெறுவது எப்போது என்ற கேள்வியெழுகிறது.
தென்பொதிகை மண்ணணான குற்றாலத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களான, முதுமக்கள் தாழி, கருப்பு, சிவப்பு கலயங்கள் என தொல்பொருட்களால் நிறைந்திருக்கிறது சொக்கம்பட்டி சத்திரம்... 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் அது. அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது அகழ்வைப்பகம்
பழந்தமிழரின் கலை, பண்பாடு, வாழ்வியலை பறைசாற்றுகிறது என்றாலும் பார்க்க நாதியில்லை. அட்டைகள் வைத்து அடைக்கப்பட்டுள்ள சன்னல் கதவுகள், இண்டு இடுக்குகளில் முளைத்த செடி, கொடிகள் என களையிழந்து கிடக்கிறது கலைக்களஞ்சியம்.
நுண்கற்கால கருவிகள், வண்ணக் கலயங்கள், கிண்ணங்கள், சுடுமண் பொம்மைகள், சுதைச் சிற்பங்கள், கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன களிமண் பெண் உருவம், சொரிமுத்து அய்யனார் கோயிலிலிருந்து சேகரிக்கப்பட்ட கால் சிலம்புகள், கைக்கடகங்கள், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், மரச்சிற்பங்கள்,பழங்குடி மக்கள் பயன்படுத்திய மூங்கில் பொருள்கள் என தொல்பொருட்களின் பட்டியல் நீள்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிக் குண்டுகள், பூலித்தேவன் பயன்படுத்திய கவண் கற்கள் உள்ளிட்டவையும் இங்குள்ளன. 8- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால் சிலை, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செங்கல், மகரதோரணர் விநாயகர், பிராம்மி சிலை. கி.மு. 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழி உள்ளிட்டவை என காண்பதற்கு பல இங்கு உள்ளன.
பழந்தமிழர் வாழ்வை வெளிச்சமிட்டு காட்ட வேண்டிய இந்தக் கட்டடம் இருட்டுக்குள் இருக்கிறது. கழிவறை, வாகன நிறுத்துமிடம் என எந்த அடிப்படை வசதிகளும் இப்பகுதியில் செய்து கொடுக்கப்படவில்லை.
தென்தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக குற்றாலத்தில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் படியான அருங்காட்சியம் உள்ளது. ஆனால் யாரும் அணுகாத காட்சியகமாக இது உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையை அணுகியபோது காசிமேஜர்புரம் என்ற இடத்தில் இரண்டரை கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகத்துக்காக கட்டடம் கட்டப்பட்டு வருவதாக தகவல் கிட்டியது.
சீசன் காலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குற்றாலம் வருவதாக தெரியவருகிறது. ஆனால் 100 பேர் பேர் கூட அருங்காட்சியத்துக்கு வருவதில்லை. தொல்பொருட்கள் புதிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு புதுப்பொலிவு பெறுவது எப்போது? பழந்தமிழர் வாழ்வியலை பல்வேறு தரப்பு மக்களும் கண்டறிவது எப்போது? அரசின் செவிப்பறைகளில் இந்தக் கேள்விகள் எதிரொலிக்கட்டும்...