மார்ச் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்திலேயே வெப்பம் சற்று அதிகரித்து காணப்படும். ஏப்ரல், மே மாதங்களில் வட இந்தியாவில் பல இடங்களில் வெயில் 40 டிகிரியை தாண்டி வாட்டிவதைக்கும். அதிகப்படியான வெயிலினால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கோடைக் காலத்திற்க்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்
ஹரியாணா, சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் நிலவ 60% வாய்ப்புள்ளது எனவும் சத்தீஸ்கர், ஒடிசாவில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவ 75% வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திராவிலும் வழக்கத்தைவிட அதிகமான வெப்பமே நிலவ வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், மாநிலங்களில் வழக்கத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்தியாவின் வட மாநிலங்கள் மத்திய இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தென் இந்தியாவில் இயல்பை விட குறைவாக பதிவாகும் என்பது சற்றே ஆறுதலளிக்கும் விதமாக உள்ளது. தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கோடைக்கால வெப்பநிலையை விட சற்றே குறைவான வெப்பமே பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது