எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்புக்கு பின் ஆட்சி கவிழுமா?

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்புக்கு பின் ஆட்சி கவிழுமா?
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்புக்கு பின் ஆட்சி கவிழுமா?
Published on

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று அளிக்கப்படும் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசியலில் சில திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தைப் பொருத்தவரையில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி உறுப்பினர்கள் மரணமடைந்ததால் அத்தொகுதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள சூழலில் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை, சபாநாயகர் தனபாலைத் தவிர்த்து 109ஆக உள்ளது. அதேபோல், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் 97 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். 

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.ஆர்.பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் இருக்கின்றனர். இதனால் டிடிவி அணியில் 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகிய அதிமுக தோழமைக் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இதில், கருணாஸ் மட்டும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதை சமீபகாலமாக வெளிபடுத்தி வருகிறார். குற்றாலம் சென்ற போதும் கூட 18 எம்.எல்.ஏக்களுடன் அவர் சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தால் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக மாறும். அப்போது பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 108 ஆக இருக்கும். தற்போது அதிமுகவின் பலம் 109 ஆக இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பு இருக்காது. 

அதேவேளையில் தகுதி நீக்க நடவடிக்கை செல்லாது என்று தீர்ப்பு வந்தால் பேரவை 232 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அப்போது பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 117ஆக மாறும். இதனால் 109 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் அதிமுகவின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

தீர்ப்புக்கு பின் என்ன நடக்கும்?

தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தால், 

  • பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக மாறும். 
  • பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 108 ஆக இருக்கும். 
  • தற்போது அதிமுகவின் பலம் 109 ஆக இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பு இருக்காது. 
  • தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்
  • இடைத்தேர்தல் முடிவுகளை பொருத்து அணிகளின் பலம் மாறக் கூடும்
  • தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடரலாம்
  • உச்சநீதிமன்றம் வழக்கை ஏற்றால் இந்த விவகாரம் தொடரும்

தகுதி நீக்க நடவடிக்கை செல்லாது என்று தீர்ப்பு வந்தால்,

  • பேரவை 232 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். 
  • பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 117ஆக மாறும். 
  • 109 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் அதிமுகவின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
  • திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதால், தினகரன் அப்படி செய்ய வாய்ப்பு குறைவு
  • தீர்ப்பை வைத்து அதிமுக தலைமையை தன் பக்கம் மாற்ற தினகரன் முயற்சிக்கலாம்
  • முதல்வர் பழனிசாமி தரப்பினர் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com