“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
மோக்கா புயல் உருவானது எப்படி?
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த பெயரில் அங்கு ஒரு துறைமுகம் உள்ளது. அதேபோல் ஏமன் நாட்டில் அந்த காலத்தில் மோக்கா என்ற பெயரில் பிரபலமான காபி இருந்ததாகவும், அந்த காபி பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் சுவாரஸ்யமான தகவல்களும் உள்ளன.
மேலடுக்கு சுழற்சி புயலாக மாறியது எப்படி?
கடந்த 6 ஆம் தேதி மேலடுக்கு சுழற்சியாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இது உருவானது. இதையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து. அதன்பிறகு வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று மோக்கா என்ற பெயரில் புயலாக மாறியுள்ளது.
இந்த புயல் வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாகவும், பின்னர் அதிதீவிர புயலாகவும் மாறும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது கிட்டத்தட்ட 175 கிமீ. வேகத்தில் காற்று வீசும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வரும் 14 ஆம் தேதி பிற்பகல் வங்கதேசத்திற்கும் மியான்மர்க்கும் இடையே இப்புயல் கரையை கடக்கும் என்றும் தெரியவருகிறது.
இந்த புயலால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கும்?
மோக்கா புயல் காரணமாக தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக உயர்வதற்கான வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் மேற்பகுதி வளிமண்டலத்தில் இருக்கும் ஈரப்பதத்தை ஒட்டுமொத்தமாக இந்த புயல் கொண்டு செல்வதால், 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.
இதன் காரணமாக நம்முடைய உடலில் நீர்சத்து குறைந்து அசௌரியமான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?
“தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் என வங்கக்கடல் முழுவதும் இந்த புயலின் நகர்வுகளுக்கு ஏற்றார்போல், காற்றுடைய வேகமும் கடல் சீற்றமும் அதிகமாக இருக்கும். இதனால் வங்கக் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்து 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.