அரசு எச்சரிக்கையையும் மீறி நீடிக்கும் போராட்டம்-  மருத்துவர்களின் கோரிக்கைகள்தான் என்ன?

அரசு எச்சரிக்கையையும் மீறி நீடிக்கும் போராட்டம்-  மருத்துவர்களின் கோரிக்கைகள்தான் என்ன?
அரசு எச்சரிக்கையையும் மீறி நீடிக்கும் போராட்டம்-  மருத்துவர்களின் கோரிக்கைகள்தான் என்ன?
Published on

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் 7-ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். முதலாவதாக, பட்ட மேற்படிப்பான எம்.டி., எம்.எஸ், போன்ற படிப்புகளில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் இருந்த ஒன்றுதான். ஆனால் நீட் தேர்வு அறிமுகமான பிறகு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அதனால் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு நடைமுறையில் இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இரண்டாவதாக மருத்துவர்களின் ஊதிய விவகாரம். தற்போது அரசு மருத்துவர்கள் 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகுதான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வுபெற்று, 1.3 லட்ச ரூபாய் சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்புப் படிப்புகளை முடித்து அரசுப் பணியில் சேரவே 30 -32 வயதாகும் நிலையில், இந்த ஊதியத்தைப் பெறும்போது ஐம்பது வயதைத் தொட்டுவிடுகின்றனர். எனவே, நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்த்துவதை மத்திய அரசுப் பணிகளில் இருப்பதைப் போல 13 ஆண்டுகளிலேயே செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 

மூன்றாவதாக அரசு கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் மாணவர்களை சரியான பணியிடங்களில் நியமனம் செய்யாமல், தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே 
பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்களுக்கு வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கோருகின்றனர். 

நான்காவதாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களுக்கான பணியிடங்களை குறைக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 800 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். எந்த அளவுக்கு நோயாளிகள் வருகிறார்களோ அந்த அளவுக்கு படுக்கைகளையும் மருத்துவர்களையும் அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோருகின்றனர். 

இந்த 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் இடத்தை காலியிடமாக அறிவித்து ஆட்சேர்ப்பு நடைபெறும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com