வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 770 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் புயல் எங்கு கரையை கடக்கும் என கணிக்கப்படவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கடலூர் முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பரவலாக காலை முதல் மழை பெய்து வந்த நிலையில் 10:00 மணி முதல் மழை ஓய்ந்து இருந்தது. தற்பொழுது மீண்டும் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய துவங்கியுள்ளது.
மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 24 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தரங்கம்பாடி தாலுகாவில் தாழ்வான பகுதியான பெருமாள் பேட்டை கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி குடிநீர் குழாய்கள் மூழ்கும் அளவிற்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் திருத்துறைப்பூண்டில் உள்ள 24 வார்டுகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் எஞ்சின் மோட்டார் வைத்து தண்ணீரை வடிய வைத்து வருகின்றனர்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கும்பகோணம் மகாமக குளம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்தனர். காரைக்கால் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடாக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்தனர்.
இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதித்திருந்த நிலையில் தனியார் படகு சவாரி நிறுவனங்கள் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகளை கடலுக்கு அழைத்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வருகிறது. கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது மேலும் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து கடலில் குளித்து வருகின்றனர் மேலும் கடற்கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை நிறுத்தியது என்எல்சி இந்தியா லிமிடெட்!
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் எனவும் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து மீனவர்களும் கடலுக்கு செல்லக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி யில் பழுப்பு நிலக்கரி வெட் எடுக்கும் பணி மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் சுற்றுலா துறை இயக்குனர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
”வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலத்தின் காரணமாக புதுச்சேரி பகுதியை சார்ந்த சுற்றுலாப் படகுசவாரி இயக்குநர்கள் (Puducherry Water Sports & Adventure Sports Operators) இன்று 26 ஆம் தேதி செவ்வாகிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் படகுசவாரிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கடல் அலையின் உயரம் 2.7 மீ முதல் 3.6 மீ வரையில் எழக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, படகு இயக்குநர்கள் அனைவரும் தங்கள் படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.