விக்கிரவாண்டி தேர்தல்| விஜய்யின் தவெக திடீர் அறிக்கை.. நாம் தமிழர் ஆதரவுதான் காரணமா?.. பின்னணி என்ன?

விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி மரணமடைந்ததையொட்டி, அந்தத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய் புதிய தலைமுறை
Published on

``விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.,.எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை’’ என அதிரடியாக அறிவித்திருக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்...ஏற்கெனவே, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகமும் அறிவித்துள்ளது. ஆனால், கட்சி தொடங்கும்போதே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எந்தத் தேர்தலிலும் போட்டியில்லை என அறிவித்துவிட்டநிலையில், தற்போது தனியாக அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன, பின்னணி என்ன பார்ப்போம்..,

விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி மரணமடைந்ததையொட்டி, அந்தத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.., தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துவிட்டது.. அதனால், திமுக, பாமக, நாதக இடையிலான மும்முனைப் போட்டியாக களம் மாறியிருக்கிறது... இந்தநிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்... அதில்,

விஜய், புஸ்ஸி ஆனந்த்
விஜய், புஸ்ஸி ஆனந்த்pt web

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, தங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவதுதான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளது...இந்த அறிக்கைக்கான காரணம் என்ன?

நடிகர் விஜய்
நடிகர் விஜய்முகநூல்

2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என தவெக முன்பே அறிவித்துவிட்டது.., ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காமல், மைக் சின்னம் கிடைத்த நேரத்தில், விஜய்யின் கோட் படத்தின் விசில் போடு பாடல் வெளியானது..,அதில், ``பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா?..,கேம்பனை தான் தொறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?’’ என்கிற பாடல் வரிகள் வரும்...அதன்மூலம், நாம் தமிழர் கட்சிக்குத்தான் விஜய் மறைமுகமாக ஆதரவு தருகிறார் என அப்போது செய்திகள் வெளியானது...தேர்தலில் வாக்களித்த விஜய் ரசிகர்களில் சிலரும், ``அடுத்தமுறை எங்க விஜய் அண்ணாவுக்கு ஓட்டு, இந்தமுறை அவரோடு அண்ணன் சீமான் அண்ணாவுக்குத்தான் ஓட்டு’’ என வெளிப்படையாகப் பேசினர்...

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும், எட்டு சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்... கூட்டணியே வேண்டாம் என பேசிவந்த சீமானும் தம்பி விஜய் வந்தால் பார்க்கலாம் எனப் பேசியிருந்தார்.., நாம் தமிழரும் விஜய்யும் இணைந்தால் மாற்றம் வரும் என சில பத்திரிகையாளர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்
“2026-ல் நா.த.க உடன் கூட்டணியா?” - விஜய் போடும் கணக்கு? த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில்!

இந்தநிலையில், விக்கிரவாண்டி இடைத் தேர்தலும்வர, மறைமுகமாக விஜய்யின் ஆதரவு சீமானுக்குத்தான் என செய்திகள் வெளியானது...விக்கிரவாண்டியில் விஜய் ரசிகர்கள் அதிகம்... தவெகவுக்கு நல்ல கட்டமைப்பும் இருக்கிறது... முதன்முறை, அம்பேத்கர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாலை அணிவித்தபோது, விக்கிரவாண்டியில்தான், புஸ்ஸி ஆனந்த் பிரமாண்ட வாகனப் பேரணி சென்று மாலை அணிவித்தார்... அதனால், தவெக நிர்வாகிகள், நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியானது..,

இந்தநிலையில்தான், இப்படியொரு அறிக்கை வெளியாகியிருக்கிறது.., ``இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை எனச் சொல்லிவிட்டு, ஆதரவு என செய்திகள் வெளியானால், அது 2026 தேர்தலை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.’’ அதனாலேயே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தவெக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com