ஒரு நேரத்தில், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்ன ரஜினியை கடுமையாக விமர்சித்த சீமான், தற்போது அவரையே நேரில் சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது நடப்பு அரசியல் களத்தில் டாக் ஆக மாறியுள்ளது. இந்த நேரத்தில் விஜய் தன்னை கைவிட்டதால்தான், ரஜினி அரசியலை சீமான் கையில் எடுத்துள்ளாரா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. சந்திப்பில் என்ன நடந்தது என்று விளக்கிய சீமான் வழியிலேயே, ரஜினி vs சீமான் என்று இருந்த களம், அன்பு சந்திப்பாக மாறியது வரை என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி. தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினி பகிரங்கமாக அறிவித்த நாள் அது. 2016ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து ஓராண்டு காலம் கடந்த நேரம். தமிழகத்தின் இருபெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்த இருவரில் ஒருவரான ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து, அதிமுகவில் பல மாற்றங்கள் நடந்தேறியது. ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிசாமியின் கைக்கு சென்றது.
இதையடுத்து, நெடுங்காலமாகவே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி. இப்போதைக்கு இங்கு சிஸ்டம் சரியில்லை. நமது நிலையை பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் சிரிக்கிறார்கள். இங்கு ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது என்று பேசினார். அப்போது, ரஜினியின் வருகை அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டபோது, அவருக்கு எதிராக முதலில் களம் இறங்கினார் சீமான்.
தேர்தல் அரசியலில் 2016ம் ஆண்டு முதல்முதலாக போட்டியிட்ட சீமான், தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். ஒரு மராட்டியரான ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று ரஜினியை கடுமையாக விமர்சித்தார். நடிப்பதோடு சரி. நாடாள ஆசைப்படக்கூடாது என்றதோடு, ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று சொன்னதையும், அரசியல் களத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று சொன்னதையும், மேடை தோறும் கேலி செய்து பேசினார் சீமான். அத்தோடு, யார் யாரோ அரசியலுக்கு வரும்போது, என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு? ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. விஜய் என் தம்பி. மக்கள் அவருக்கு வாக்களித்தால் பாராட்டு தெரிவிப்பேன் என்று தமிழன் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்றும் கூறினார் சீமான்.
நாம் தமிழர் கட்சியில் சீமான் தொடர்ந்து, அடுத்த கட்டத்தில் இருக்கும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் ரஜினியை காட்டமாக விமர்சித்தனர். இதற்கிடையே, கொரோனோ பெருந்தொற்றுக்குப் பிறகு, உடல்நலனை கருத்தில்கொண்டு அரசியலுக்கு வர இயலவில்லை என்று ரஜினி அறிவிக்க, அதனை வரவேற்றார் சீமான்.
முன்பே சொன்னதுபோல, விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று கூறிய சீமான், சொன்னபடியே இந்த ஆண்டு கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகளையும் சொன்னார். கூட்டணிக்கு தம்பி வந்தால் சேர்ந்து களம் காணுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு முடிந்த கையோடு, அவரது ஆதரவு பேச்சு மொத்தமாக மாறியது. கொள்கை சரிபடவில்லை. முரண்பாடு உண்டு, நாதக தனித்தே போட்டி என்று தொடங்கியவர், முதலில் அம்பேத்கரை படியுங்கள், அது என்ன கொடியின் கலர், கூமுட்டைக் கொள்கை என்று விஜய்யை கடுமையாக சாடினார்.
என்ன நடந்தாலும் நாங்கள் அண்ணன் தம்பிதான் என்று கூறிய சீமான், யாரானாலும் எதிரி எதிரிதான் என்ற நிலைக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், நடிகர் ரஜினியை அவர் சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தம்பி விஜயின் வருகை தனது அரசியலுக்கு பலமாக இருக்கும் என்று எண்ணிய சீமானுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதால்தான் ரஜினி அரசியலை கையில் எடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
குறிப்பாக, ரஜினியுடனான தனது சந்திப்பே அரசியல்தான் என்று கூறிய சீமான், சினிமா குறித்தும், அரசியல் குறித்தும் பல விஷயங்களை பேசியதாகவும், அவை அனைத்தையும் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார். கூடவே, ரஜினுக்கு அரசியல் ஆர்வமுண்டு. ஆனால் அவருக்கு சரிபட்டு வராது. இப்போது அரசியல் களத்தில் வெற்றிடம் இருக்கிறது. சிஸ்டம் சரி இல்லை என்ற ரஜினியின் கூற்றை ஏற்கிறேன் என்றும் ரூட்டை மாற்றியிருக்கிறார்.
சீமான் மட்டுமல்ல, அவரை அடுத்து சாட்டை துரைமுருகன் வரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று போஸ்ட் போடுகின்றனர். கழுகு - புலி ஃபோட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு Fire விடுகின்றனர். ஆக, ஒரு கட்டத்தில் யாரை கடுமையாக எதிர்த்தாரோ, அவரிடமே சீமான் தஞ்சமடைந்திருப்பதாகவும், வரவேற்பதாக கூறிய விஜய்யின் மாநாடு குறித்து பேசியிருப்பதாகவும் சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது. அதேபோல், மரியாதை நிமித்தமான சந்திப்புதானா அல்லது எதிர்வரும் தேர்தலில் ரஜினி ஆதரவு பெற்று சீமான் களம் காண திட்டமிடுகிறாரா என்ற பலப்பல கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.
அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது. நிரந்தர நண்பனும் கிடையாது. சூழலுக்கு ஏற்ப அது மாறும் என்று சும்மாவா சொல்கிறார்கள்.