ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி!

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி!
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி!
Published on

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் மீதான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

சுமார் ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்கு பின், 2022 ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், “சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும்” என பரிந்துரைத்தது.

இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி தினமலர் நாளிதழின் வேலூர் மற்றும் திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் காக்கப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், முழுமையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழக அரசின் உயரதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல் போகலாம். அதனால் உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சுதந்திரமான அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும். நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை அளித்து ஆறு மாதங்களுக்கு மேல் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com