நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை...பிரதமருடனான சந்திப்பு.. என்ன கணக்குப் போடுகிறார் ஓபிஎஸ்?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் பங்காளி சண்டை மீண்டும் சூடிபிடித்துள்ளது. “நான் வாயைத் திறந்தால் நீ திகாருக்குத்தான் போகவேண்டும்” என்று ஓபிஎஸ் கூற, “நானும் முதல்வராக இருந்தவன், எனக்கும் எல்லாம் தெரியும்” என்று வெடித்தார் இபிஎஸ்.
ops and eps
ops and epspt
Published on

சிறிது காலமாக தமிழக அரசியல் களம் திமுக VS அதிமுகவாக இருந்த சூழலில், மீண்டும் ஓபிஎஸ் VS இபிஎஸ் என்று மாறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்துவிட்ட சூழலில், ஓபிஎஸ், இபிஎஸ் இடையேயான இந்த வார்த்தை மோதல்கள் எங்குபோய் முடியும். யார் யாருடன் கூட்டணி வைக்க வாய்ப்பு? ஓபிஎஸ்-ன் எதிர்காலம் என்ன என்ற பல்வேறு விஷயங்களை அலசுகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

அரசியல் சாணக்கியன் எடப்பாடி!

ஜெயலலிதா இருந்தபோதே அமைச்சராக இருந்து, சேலம் பகுதிகளில் அதிமுகவின் நம்பிக்கை நாயகனாக இருந்த எடப்பாடி, அவரது மறைவுக்குப் பிறகு சசிகலா தயவோடு முதலமைச்சர் அரியணை ஏறினார். இடைக்கால முதல்வர் பதவி பிடுங்கப்பட்ட கோபத்தில் தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ், ஒருகட்டத்தில் இபிஎஸ்ஸோடு வந்து சேர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக நீடித்தார்.

தன்னுடன் யார் இருந்தால் அது சரியாக இருக்கும் என்று தெரிந்த இபிஎஸ், 4 வருட ஆட்சிக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தன்வசமாக்கி, அதிமுகவுக்கே நான்தான் தலைமை என்று பொதுக்குழுவைக் கூட்டி தனிக்காட்டு ராஜாவாக உட்கார்ந்துள்ளார்.

ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கி, கொடி, சின்னம் என்று எதையும் அவர் பயன்படுத்தாத வகையில் மாற்றி, ஓபிஎஸ்ஸை ஒன்றுமில்லாமல் ஆக்கி, வளர்ந்து நிற்கிறார் எடப்பாடி. நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்ஸுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்காததால், இபிஎஸ் எதிர்ப்பு என்ற பதத்தில் அரசியல் செய்து வருகிறார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் நீடிப்பது அந்த கட்சிக்குதான் பலவீனம் என்று தெரிந்த உடன், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, இனி கூட்டணிக்கே இடமில்லை என்று அரசியல் சாணக்கியனாக மிளிர்கிறார் எடப்பாடி.

ops and eps
நாசா காலண்டரில் இடம்பெற்ற ஓவியங்கள்... பழனி மாணவிகள் செய்த சாதனை!

பன்னீர்செல்வம் போடும் கணக்கு என்ன?

கட்சி, பொறுப்பு, அதிகாரம் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் ஓபிஎஸ், தனக்கு வேறு எந்த பிடிப்பும் இல்லை என்ற காரணத்தினால், பாஜகவின் கையை பற்றியுள்ளதாகவே மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரனுடன் இணைந்து போட்டியிடுவாரா, இபிஎஸ்ஸுடன் இணைய வாய்ப்புகள் உள்ளனவா என்ற கேள்விகள் எழுந்து வரும் சூழலில்தான், எடப்பாடியை மீண்டும் சீண்டி வருகிறார் ஓபிஎஸ்.

சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி தரப்பு முக்கிய தீர்மானங்களை போட்டபோது, தானும் ஒரு நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, வேண்டுமென்றே எடப்பாடியை வம்பிழுத்துள்ளார் ஓபிஎஸ்.

சமீப காலமாக தன்னைப் பற்றி ஓபிஎஸ் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாத எடப்பாடி, இந்த முறை கொதித்தெழுந்துள்ளார். அந்த வகையில், தானும் அரசியல் கள லைம்லைட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் ஆசை பூர்த்தியாகியுள்ளது. வெகுவிரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி, சசிகலா தரப்பை பேசி சமாளித்து பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது.

பன்னீரின் எதிர்காலம் அவ்வளவுதானா?

ஓபிஎஸ் செய்யும் அரசியல், அவரின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கியது தார்மீக ரீதியாக தவறு என்பது எனது கருத்து. ஓபிஎஸ்ஸின் நீதிமன்ற போராட்டம் தோல்வியடைந்துவிட்டது. அவருக்கு பின்னால் எந்த எம்.எல்.ஏவும், கட்சிக்காரர்களும் வருவதில்லை. ஒரு கட்சியில் இருண்டு தலைவர்கள் சம அதிகாரத்தில் இருந்தால் என்றாவது ஒருநாள், ஒருவர் மற்றவரை முதுகில் குத்துவார். இது தெரியாமல்தான் இபிஎஸ் உடன் ஓபிஎஸ் அரசியல் செய்திருக்கிறார். அதிமுகவுக்காக நான் இத்தனை செய்தேன். தியாகம் செய்தேன் என்று ஓபிஎஸ் கூறுகிறார். ஆனால், இபிஎஸ் தனக்கு என்ன தேவையோ அதை செய்துள்ளார்.

உங்களுக்கு(ஓபிஎஸ்ஸுக்கு) அந்த சூட்சமம் தெரியவில்லை. முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தில் பிடிவாதம் பிடித்திருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டீர்கள். எடப்பாடி ஒற்றைத்தலைமை என்ற இலக்கோடு பயணித்து வென்றுள்ளார். இப்போது அவரை மிரட்டிப் பார்க்கும் அரசியலுக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்கள். பாஜகவோடு இணைந்து எடப்பாடியை அச்சுறுத்தி பார்க்கலாம் என்று நீங்கள் நினைத்தாலும், அவர் இதற்கெல்லாம் பயப்படமாட்டார். இப்போது பாஜகவை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். எடப்பாடி என்ற அரசியல்வாதியிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.

ops and eps
பொங்கலுக்கு ரூ.1000 முதல்வர் அறிவிப்பு; யாருக்கெல்லாம் கிடையாது? உரிமைத்தொகை குறித்தும் அறிவிப்பு...

இனி ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் வழிகள் இரண்டுதான். ஒன்று தேர்தலில் போட்டியிட்டு எடப்பாடி அணியை தோற்கடிக்க வேண்டும். அல்லது விருப்பமிருந்தால் பாஜகவோடு சேர வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால், கலகம் பிறக்காதவரை நன்மை பயக்காது. ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் ஒன்றும் ஒளிமயமாக இல்லை. இனி இபிஎஸ்ஸுடமுன் சேர முடியாது. பாஜகவுடனும் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தேர்தலில் அண்ணாமலை பேச்சை கேட்டு பின் வாங்கியிருக்கக்கூடாது. மற்றவரை நம்பி அரசியல் செய்தால் இப்படித்தான் நடக்கும்” என்றார்.

மீண்டும் இணையும் அதிமுக - பாஜக கூட்டணி?

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய அவர், “எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் எந்த மனுவை கொடுத்தாலும் இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் இருக்காது. அதிமுகவும், பாஜகவும் சாஃப்ட் ஆகவே டீல் செய்து வருகின்றனர். கடுமையாக விமர்சித்துக் கொள்வதில்லை. இருகட்சிகளும் பிரிந்ததற்கான காரணம் தெரியாதவரை, மீண்டும் கூட்டணியில் சேருவார்களா என்று சந்தேகம் வலுத்துக்கொண்டேதான் இருக்கும். ஒருபக்கம் மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று INDIA கூட்டணி வலுவாக இருக்கிறது. நீங்களும்(இபிஎஸ்) மோடி வரக்கூடாது என்று சொல்ல முடியுமா? பிரிந்திருப்பதெல்லாம் வெற்று நாடகம்.

ஏதோ ஒரு சூழலில் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவுடன் இணைந்து அவர்களது வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி வைக்க வாய்ப்புண்டு. அப்போது, இதில் ஓபிஎஸ்-ஐ சேர்க்கக்கூடாது என்று இபிஎஸ் கூறுவார். அப்படி சேர்த்தால் தாமரை சின்னத்திலேயே நின்றுகொள்ளுங்கள் என்று கெடுபிடி காட்டுவார். அதற்குத்தான் இந்த நாடகம். மற்றபடி ஓபிஎஸ்ஸ்-ன் எதிர்காலம் பாஜகவை நம்பி இருப்பதுதான்” என்றார்.

ops and eps
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி...

பழிவாங்கும் அரசியலை கையில் எடுத்து என்ன பயன்?

இபிஎஸ் மீதான ஓபிஎஸ்ஸின் இந்த திடீர் தாக்குதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “அரசியல் களத்தில் ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் அவ்வளவுதான். கட்சி, பதவி என்று அனைத்தையும் இழந்துவிட்டு பாஜகவை நம்பி இருக்கிறார். இதுபோன்ற பழிவாங்கும் அரசியலை மட்டுமே அவரால் செய்ய முடியும். அதைத்தவிற வேறு வழி இல்லை” என்று கூறினார். அதிமுகவின் பங்காளி யுத்தம் குறித்து பத்திரிகையாளர் ப்ரியன் கூறியபோது, “அதிமுக ஒற்றுமையாக இருக்காதவரை, மற்ற கட்சிகள்தான் அவர்களை ஆட்டிப்படைப்பார்கள். ஒற்றுமையாக சேர்ந்தால்தான் செல்வாக்காக நடைபோட முடியும்” என்றார். அவரது கருத்தப்படி, 4 ஆண்டுகளுக்கு ஒற்றுமையாக இருந்து ஆட்சி நடத்திய எடப்பாடியும், பன்னீரும் மீண்டும் இணைந்தால் மட்டுமே, ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுவது நியாயமாக இருக்கும்.

எழுத்து: யுவபுருஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com