``சிவராமன் தன் குற்றத்தை உணர்ந்து எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்..,அதில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருந்தார்..இது தற்கொலைதான். இதற்கு பின்னால் யாரும் இல்லை’’ என பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்று காலை உயிரிழந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி குறித்து சீமான் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 9- ம் தேதி வரை போலியாக ஒரு என்சிசி முகாம் நடந்துள்ளது. அந்த முகாம் போலி என அறியாதநிலையில், அந்தப் பள்ளி மாணவர்கள் 17 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த முகாமில் கலந்துகொண்ட 13 வயதுடைய மாணவி ஒருவரை, போலி என்சிசி பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக மாணவி புகார் அளித்த நிலையில், சிவராமன், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், ‘மேலும் 13 மாணவிகள் சிவராமனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்’ என்ற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. இதனால் சிவராமனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டிருந்தால், தாமாக முன்வந்து புகார் கொடுக்கலாம் எனவும் என காவல்துறை அறிவித்தது. தொடர்ந்து, நேற்றும் ஒரு மாணவி சிவராமன் மீது புகாரளித்துள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பே, சிவராமன் குடும்பப் பிரச்னை காரணமாக, எலி பேஸ்ட்டை சாப்பிட்டதால், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் சிவராமன் உயிரிழந்ததாக கிருஷ்ணகிரி காவல் கண்காளிப்பாளர் தெரிவித்துள்ளார். சிவராமனின் தந்தையும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பாலியல் கொடுமை வழக்கில், விசாரணை நடத்த முதல்வர் உத்தரவின் பேரில், ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், குற்றவாளியே மரணமடைந்திருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
``சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொது மக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டபோது எழுந்த கேள்விகளுக்கும் திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது. சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையோ, ``
``இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது’’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்..,
இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர் இந்த விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்பினர்..அதற்கு அவர்,
``"குற்ற உணர்வில் தற்கொலை செய்து இறந்துபோனார் சிவராமன். இந்த மனவேதனையில் அவரது அப்பா மது அருந்தி சாலையில் விழுந்து இறந்துவிட்டார். சிவராமன் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிந்ததும் அவரை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள்தான். நான் சாகப்போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என வருத்த கடிதம் எழுதியிருந்தார். அதைக் கட்சி தம்பிகளிடம் கொடுத்து விசாரிக்க சொன்னேன். தான் செய்தது தவறு என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.இதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இது தற்கொலைதான். இதற்கு பின்னால் யாரும் இல்லை" என ஆணித்தரமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.