சென்னையை அடுத்த திருவொற்றியூர் பள்ளியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாயு கசிவு சம்பவம் ஏற்பட்டு மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இதற்கான காரணம் என்ன என்று அறியப்படாத நிலையில், இன்று மீண்டும் அதேப்பள்ளியில், வாயு கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயங்கி விழுந்ததாக பெற்றோர்கள் குற்றசாட்டை வைத்துள்ளனர். என்ன நடந்தது? விரிவாக அறியலாம்...
திருவொற்றியூர் கிராம சாலை பகுதியில் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது விக்டரி என்ற தனியார் பள்ளி. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இயங்கும் இந்தப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இந்தப் பள்ளியில் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதல் முதலில் வாயு கசிவு ஏற்பட்ட அந்த நாளன்று பெற்றோர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர். அதன் முடிவு இன்றுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து திங்கட்கிழமையான இன்று பள்ளி மீண்டும் திறக்கப்படுவதாக பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் மட்டும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய நிலையில் பலர் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்படியிருக்க... இன்று காலை மீண்டும் இதே பள்ளியில் வாய் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 6 மாணவ மாணவியர் மயக்கம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆவேசமடைந்த பிற மாணவ மாணவியிஅரின் பெற்றோர்கள், தாங்கள் பலமுறை அறிவுறுத்தியும் எவ்வித ஆலோசனை இல்லாமல் பள்ளியை திறந்த நிர்வாகத்தை கண்டித்து இன்று அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவர்கள் மூச்சுத் திணறலை உணர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில், “அப்படியென்றால், ஒட்டுமொத்த பகுதியும் அதன் தீவிரத்தை உணர்ந்திருக்க வேண்டும்” என அந்தப் பகுதி மக்களும் பெற்றோர்களும் கூறுகிறார்கள். மேலும் இது குறித்து அவர்கள் கூறும் பொழுது,
“அடிப்படை கட்டமைப்புகளும் காற்று வசதிகளும் இல்லாத பள்ளி கட்டுமானத்தின் காரணமாக மாணவ மாணவியர்கள் மயங்கி விழுகின்றனர். கிராம சந்தை நிலத்தில் குடியிருப்புகள் மட்டுமே கட்ட வேண்டும் என்கிற நிலையில் மூன்று மாடி அளவிற்கு பள்ளி கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது” என்கின்றனர்.
மேலும், “மூன்றாவது மாடியில் இருக்கும் மாணவர்கள் அதிக வெப்பத்தை உணர்வதாலும் வகுப்பறைகளில் காற்றோட்ட வசதி இல்லாததன் காரணமாகவும் மின்விசிறி இயங்காததன் காரணமாகவும் இது போன்ற சிக்கல் ஏற்படுவது” எனவும் சில பெற்றோர்கள் கூறுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருவெற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர், “பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்திய பின்னர், பெற்றோர்களின் சம்மதம் கிடைத்த பின்னர்தான் பள்ளியை திறக்க வேண்டும்” என கூறினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். அவர்களின் ஆய்வின் முடிவில், பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதற்கான எந்த விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். வாயு கசிவால் மாணவர்கள் மூச்சுத் திணறலில் மயங்கி விழவில்லை என்பதால், காற்றோட்டம் இல்லாத சூழலும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், “பள்ளி தற்போது இயங்காமல் இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மூச்சுத்திணறலுக்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து பிரச்சனையை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்தி விரைவில் பள்ளியை திறக்க வேண்டும்” என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.