வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன? எஃப்ஐஆர் முரணும்.. நடந்த உண்மையும்...!

வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன? எஃப்ஐஆர் முரணும்.. நடந்த உண்மையும்...!
வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன? எஃப்ஐஆர் முரணும்.. நடந்த உண்மையும்...!
Published on

கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? உண்மையில் நடந்தது என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா? என்ற தலைப்பில் கோவையில் புதிய தலைமுறையின் சார்பில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் தொடர்பாக புதிய தலைமுறை மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெற்ற அரங்க மேலாளர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பேரில் காவல்துறை தயாரித்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், முன்னுக்குப் பின் முரணான வகையில் அமைந்துள்ளன.

குறிப்பாக மாணவர்களை வைத்து வட்டமேசை விவாதம் நடத்தப்போவதாகக் கூறி அரங்கம் கேட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வட்டமேசை நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள், பேச இருக்கும் தலைப்பு என்ன? அனுமதி இலவசம் என்பது பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சுமார் 100 முறைக்கு மேலாகவும், புதிய தலைமுறையின் அனைத்து சமூக வலைப் பக்கங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அரங்கில் ஏற்பட்ட களேபரத்தால், நாற்காலிகள் சேதமடைந்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்ச்சியின் போது, காவல்துறையினர் கூறுவது போல் நாற்காலிகள் உள்ளிட்ட அரங்கிலிருந்த எந்த சொத்துக்களும் சேதப்படுத்தப்படவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதற்கான முழு வீடியோ காட்சிகளும் புதிய தலைமுறை வசம் உள்ளன.

கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ்தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கவில்லை என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெறியாளர் கார்த்திகைச் செல்வன், தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வரம்பு மீறக் கூடாது என்பதை நயமாக எடுத்துக்கூறித்தான் நிகழ்ச்சியையே தொடங்குகிறார்.

அடுத்ததாக, அனுமதி இலவசம் என்று விளம்பரம் செய்துவிட்டு நிகழ்ச்சிக்கு வருவோர், போவோர்களை கண்காணிக்கத் தவறி விட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் புதிய தலைமுறையின் ஊழியர்கள் 40 பேர் கொண்ட குழு, நிகழ்ச்சிக்கு வருவோர் மற்றும் போவோருக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தந்ததோடு, நிகழ்ச்சி முடியும் வரை கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தது.

மேலும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியபோது, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தலைப்பையொட்டி பேசப்பட்ட விஷயங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டன. அரசியல் சாசனத்திற்குட்பட்டு, சட்ட ரீதியிலான கருத்துக்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டன. மேலும், விவாத நிகழ்ச்சியைக் காண வந்த நேயர்கள், நிகழ்ச்சி முடிந்து சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக தலைவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். பின்னர் சுமூகமாகவே அரங்கில் இருந்து கலைந்து சென்றனர்.

நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து, ஒரு வாரத்திற்கு முன்னரே, புதிய தலைமுறை சார்பில் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்தே நிகழ்ச்சிக்கு வந்த தலைவர்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது,

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் மேலாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுதான் இந்த புகார் மனு பெறப்பட்டதா என நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com