விஜய்யின் அரசியல் நகர்வு: அரசியல் கட்சியினர் சொல்வதென்ன?
நேற்று நடிகர் விஜய் மாணவர்களை சந்தித்து கல்வி விருது வழங்கியிருந்தார். சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஓட்டுக்கு பணம் தருவது பற்றி விஜய் பேசியது வைரலானது.
இதுதொடர்பாகவும், விஜய்யின் நேற்றைய நிகழ்வு தொடர்பாகவும் அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நல்லதுதான் சொல்லியிருக்கிறார்... யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவரை வரவேண்டாம் என சொல்ல யாருக்கும் உரிமையில்லை” என்று கூறினார்.
இதேபோல, யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மேலும் பேசுகையில், “எல்லா நடிகர்களும் ரசிகர் மன்றம் மூலமாக பொதுச்சேவையில் ஈடுபடறாங்க. இன்றைக்கு விஜய் கல்விக்காக உதவி பண்ணிருக்காரு. நல்ல விஷயம்தான், வரவேற்கக்கூடிய ஒன்றுதான். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வருவது அவசியம்” என்றார்.
நடிகர் விஜய்யின் கல்வி தொடர்பான செயல்கள் நம்பிக்கையைத் தருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார். குறிப்பாக அம்பேத்கர் உளிளிட்ட சமூகநீதி தலைவர்களை படியுங்கள் என விஜய் சொல்லியிருப்பதற்கு, தன் பாராட்டுகளை தெரிவித்தார் தொல்.திருமாவளவன்.
வாக்குக்கு பணம் வாங்கக் கூடாதென்று பெற்றோருக்கு மாணவர்கள் கூற வேண்டுமென்று விஜய் கூறிய அறிவுரையை வரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.