செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடியதாகவும் மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்றும் கூறியிருந்தார்.
இந்த பேச்சு அடுத்தடுத்து வளர்ந்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்குள் பிளவு ஏற்படவே காரணமாகியிருக்கிறது. சரி, இந்த பேச்சின் உண்மைத்தன்மை என்ன?
1956ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன என்று தேடியபோது, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அப்போதைய பத்திரிகை செய்திகளை தொகுத்து எழுதிய வீரத்திருமகன்: நேதாஜி- பசும்பொன் தேவர் ஒப்பீடு என்ற புத்தகத்தில் 68 ஆம் பக்கம் இதுபற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை நமது ஃபேக்ட் செக்கில் பயன்படுத்துகிறோம்.
1956 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தன. விழாத் தலைவரும், மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பி டி ராஜன் மேடையில் அமர்ந்திருந்ததாகவும், அப்போது மணிமேகலை என்ற சிறுமி பேசிய நிலையில், அவருக்கு அடுத்து பேசிய அறிஞர் அண்ணா பகுத்தறிவோடு ஒப்பிட்டு அந்த பேச்சை அணுகியிருக்கிறார். மறுநாளும் நிகழ்ச்சிகள் தொடர்ந்தநிலையில் நிகழ்ச்சிக்கு வேதனையுடன் வந்த தேவர், ஆலயத்தில் தெய்வ நிந்தனைப் பேச்சு நடந்தது நல்லதல்ல. அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது விழாவைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தேவரின் கருத்தை பிடிஆர் ஏற்காத நிலையில் விழாவில் அவரவர் கருத்துகளை அவரவர் சொல்வதற்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார். உடனே ஒலிப்பெருக்கி முன் வந்த தேவர் எக்காரணத்தைக் கொண்டும் ஆலயத்தில் யாரும் தெய்வ நிந்தனைப் பேச்சு பேசக்கூடாது, முதல்நாள் அண்ணாதுரை பேசியது பக்தர்களை புண்படுத்தி விட்டது. எனவே பொன்விழா நிகழ்ச்சிகளைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மறுநாள் முதல் நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டன என்று தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். அதாவது அறிஞர் அண்ணாவுக்கும், பசும்பொன் தேவருக்கும் கருத்து முரண் ஏற்பட்டது உண்மை. ஆனால், பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று பேசியதாக கூறுவதில் உண்மையில்லை, மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவந்த கும்பல் என்று அண்ணாமலை பேசியதும் நடக்கவில்லை.