நவீன இந்தியாவின் பொறியியல் அதிசயம்.. புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புகள் என்னென்ன?

ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. நவீன இந்தியாவின் பொறியியல் அதிசயமாக விளங்கப் போகும் புதிய பாம்பன் பாலத்தை பற்றி புதிய தலைமுறையின் பிரத்தியேக தொகுப்பின் வழியே பார்க்கலாம்...
pamban bridge
pamban bridgept desk
Published on

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தீபகற்பத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களின் உழைப்போடு உருவாக்கப்பட்ட ரயில் பாலம்தான் பாம்பன் பாலம். பாக் ஜலசந்தியும் மன்னார் வளைகுடாவும் இணையும் நீர் பகுதியில் 2.04 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 100 ஆண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்து தேவையைபூர்த்தி செய்த பழைய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் பலவீனமாக உள்ளதால் கப்பல் செல்வதற்கான திறப்பு பாலத்தின் கட்டுமானத்தில் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், நூறாண்டுகளாக பல்வேறு காலநிலைகளையும், கடலின் உப்புத்தன்மையும் தாங்கி நிற்கும் பழைய பாலத்திற்கு அருகேநவீன வடிவமைப்பில் புதிய பாம்பன் பாலம் ஒன்றை கட்ட தீர்மானிக்கப்பட்டது.

pamban bridge
முடிவுக்கு வந்தது 109 ஆண்டுகால பழைய பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் சேவை!

இதற்காக, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஐஐடி கட்டுமான பேராசிரியர்கள் மூலம் நவீன பாம்பன் பாலத்தை எவ்வாறான தொழில் நுட்பத்தில் கட்டலாம் எனும் சாத்தியக் கூறு அறிக்கை ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டது. புதிய பாம்பன் பாலத்தை கட்டி முடிப்பதற்கு 545 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அகமதாபாத்தை சேர்ந்த மூன்று தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பு புள்ளி வழங்கப்பட்டது.

இதையடுத்து பழைய பாம்பன் பாலத்திற்கு இடதுபுறம் புதிய பாம்பன் பாலம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதாவது புதிய பாம்பன் பாலம் நடுவில் இருக்க அடுத்து பழைய பாம்பன் பாலம், அதற்கு அடுத்து இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் என மூன்று பாலங்களும் 40 மீட்டர் இடைவெளியில் அமையுமாறு திட்டம் வடிவமைக்கப்பட்டது. புதிய பாம்பன் பாலத்தின் நீளம் 2.08 கிலோ மீட்டர். புதிய பாம்பன் பாலத்தில் மொத்தம் 333 தூண்கள் கடலில் இறக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தூணும் கடலுக்கு அடியில் 36 மீட்டர் வரை கான்கிரீட் கலவைகளால் பூசப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தூண்களுக்கு மேல் 99 ரயில் இணைப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கப்பல் செல்லும் தூக்கு பாலத்தையும் சேர்த்தால் மொத்தம் நூறு இணைப்புகள் பாலத்திற்கு வலு சேர்க்கின்றன. கப்பல் செல்லும் தூக்கு பாலத்தின் நீளம் 72.5 மீட்டர். இதற்கு முன் இருந்த பழைய பாம்பன் பாலத்தில் கப்பல் செல்லும்போது பாலம் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய புதிய பாலத்தில் லிப்ட் போன்று தூக்கும் வகையில் தூக்கு பாலமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தூக்கு பாலத்தின் மொத்த எடை 640 டன். கப்பல் செல்லும் போது அதிகபட்சம் 17 மீட்டர் உயரம் வரை ரயில் பாலம் தூக்கப்படும். பழைய பாம்பன் பாலத்தில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் பயணிக்கும் நிலையில், புதிய பாலத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். அதாவது, பழைய பாலத்தை ஒரு ரயில் கடக்க 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் என்றால் புதிய பாலத்தை இரண்டு முதல் மூன்று நிமிடத்தில் கடந்து விட முடியும் எனர யில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.

புதிய பாம்பன் பாலத்தில் 92 சதவிகித கட்டுமான பணிகள் முடிவடைந்து தூக்கு பாலம் ரயில் பாலத்தோடு இணைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாத இறுதியில் பாலத்தின் முழு கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஜனவரி முதல் வாரத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: ந.பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com