வளம் கொழிக்கும் தொழிலாக பார்க்கப்பட்ட தென்னை விவசாயம் வளமிழக்க காரணமென்ன? - விரிவான அலசல்!
தண்ணீரின் தேவை குறைவு. ஆட்களும் அதிகம் தேவையில்லா சூழலில் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் தென்னை சாகுபடியில் ஈடுபடத் தொடங்கினர்.
தற்போது தஞ்சையில் சுமார் லட்சத்தி 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை வீழ்ச்சியடையத் தொடங்கி தற்போது ஒரு தேங்காய் ரூ.6 முதல் 7 வரை மட்டுமே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுவதால் தேங்காய்களை விளைவிக்கும் தொகையைக் கூட ஈட்ட முடியாமல் இந்த இரு மாவட்ட தென்னை விவசாயிகளும் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெளிநாட்டு பாமாலிலை ஊக்குவிக்கும் அரசு, உள்ளூர் தென்னை விவசாயத்திற்கு உதவ முன்வரவேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள் கள் இறக்கவும் அனுமதி கோருகின்றனர். அரசு பெயரளவில் கொப்பரை கொள்முதல் செய்வதால் வெளிச் சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை என்கின்றனர் விவசாயிகள். தேங்காய்க்கு உரிய விலை வேண்டும். வெளிநாட்டு பாமாயில் இறக்குமதியை தடைசெய்து தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உடலுக்கு ஆரோக்கியமான கள் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் தஞ்சை மாவட்டம் பேராவூணியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னைக்கு உரிய விலை கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து தென்னை விவசாயத்தை செய்யப் போவதாக சொல்லும் விவசாயிகள் அரசு தங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென எதிர் பார்க்கிறார்கள்.