செய்தியாளர்: சுரேஷ் குமார்
1963 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம், நீண்ட நெடிய காலமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் அங்கமாக மட்டுமே இருந்து, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இன்று நிறைவேறி உள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?. திட்டம் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2000 கனஅடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஒன்று. இதன்மூலம் மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 31 ஏரிகளும், 1,045 குளம், குட்டைகளும் நீராதாரத்தை பெறும். இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களை சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயனடைவர்.
விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்து வந்திருக்கும் பாதை, இத்திட்டத்தால் பயனடையும் குளம், குட்டைகளுக்கு இடையேயான தூரத்தை விட நீண்ட நெடியது என்றே கூறலாம். சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பாக வேளாண் மக்களிடம் எழுந்த இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையானது, 1963 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒலித்தது.
அதன்பின்னர், அனைத்து தேர்தல் காலக்கட்டங்களிலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தது அத்திக்கடவு - அவிநாசி திட்டம். திட்டத்தை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தீர்த்த குடயாத்திரை, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பொதுவேட்பாளர் நிறுத்தியது என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
ஒருவழியாக கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, இத்திட்டத்திற்கான ஆய்வு பணிகளுக்கான 3 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒதுக்கி, திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கினார். பின்னர் பணிகள் தாமதமாக, 2017-ம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2018 ஆண்டு, இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கு அடுத்தாண்டே அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டத்திற்காக 1,652 கோடி ரூபாயை ஒதுக்கினார். அந்தாண்டின் பிப்ரவரி மாதம் அவரது தலைமையிலேயே திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 2021 சட்டசபை தேர்தலின் போது 80 சதவீதம் பணிகள் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், திட்டம் செயல்பட்டு வருவதில் தாமதம் நிலவி வந்தது.
நிலம் கையகப்படுத்துவதற்கான விவகாரத்தில் விவசாயிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது, திட்டத்திற்கான பதிக்கப்பட்ட குழாய்களில் ஏற்பட்ட சேதம் உள்ளிட்டவை இதற்கான காரணமாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரங்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, இத்திட்டம் செயல்பாட்டை தொடங்குகிறது.
இந்த திட்டத்திற்காக 1,046 கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் இத்திட்டத்திற்காக சுமார் 1,916 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் பராமரிப்பு பணியை 5 ஆண்டு காலம், 'எல் அண்ட் டி' நிறுவனத்தினர் மேற்கொள்ளவுள்ளனர். பல தசாப்தங்களாக வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கை நிறைவேறுவது, அவர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.