அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அப்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து பணம் பெற்றதாகவும் அப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதன்படி ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் காலை 7 மணி முதல் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் மற்றும் சென்னையில், செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகம் ஆகியவற்றில் மத்திய துணை ராணுவப்படை துணையுடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் ஜூன் 14 நள்ளிரவில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் செந்தில் பாலாஜி கணக்கில் 1 கோடியே 34 லட்சம் ரூபாயும், அவரது மனைவி மேகலா கணக்கில் 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், வருமானவரிக் கணக்கில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுடன் இது கூடுதலாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, ‘மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணிகளுக்கு உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் பெற்ற பணத்தை செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது’ எனக் கூறி அவரை அதற்காக கைது செய்துள்ளாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
மேலும் அரசு போக்குவரத்து கழகங்களின் முன்னாள் நிர்வாக இயக்குனர்களுடன் சேர்ந்து செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆர்.வி.அசோக்குமார், எம்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது எப்படி?
வேலைக்காக பணம் கொடுத்த கே.அருள்மணி, எஸ்.தேவசகாயம், வி.கணேஷ் குமார் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்குகளின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த இந்த வழக்குகளின் தன்மையை கருத்தில் கொண்டு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் 2(1)(U), 2(1)(v) மற்றும் 3 ஆகிய பிரிவுகளில் அமலாக்கத்துறையால் 2021 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
(குறிப்பு: அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்ய முடியாது. ஒரு நபர் மற்ற விசாரணை அமைப்புகளிடம் புகார் அளித்து அதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொள்ள முடியும்.)
இப்படியாக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ECIR/MDSZO/21/2021 என்ற எண்ணுடன் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அமலாக்கத்துறை உதவி இயக்குனரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின்படி, 2022ஆம் ஆண்டில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், ஒருமுறை கூட அவர்கள் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் பிரிவு 2(1)(u) சொல்வது:
(u) “proceeds of crime” means any property derived or obtained, directly or indirectly, by any person as a result of criminal activity relating to a scheduled offence or the value of any such property [or where such property is taken or held outside the country, then the property equivalent in value held within the country] [or abroad];
தமிழில்: குற்றச் செயல்களின் மூலமாக ஒருவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறப்படும் தொகை அல்லது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வாங்கப்படும் சொத்து ஆகியவை குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் பிரிவு 2(1)(v) சொல்வது::
(v) “property” means any property or assets of every description, whether corporeal or
incorporeal, movable or immovable, tangible or intangible and includes deeds and instruments
evidencing title to, or interest in, such property or assets, wherever located;
தமிழில்: அசையும் பொருட்கள், அசையா சொத்துகள், சொத்துரிமை பத்திரங்கள், முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை எங்கு வைத்திருந்தாலும் அது குற்றம் சாடப்பட்ட நபரின் சொத்தாக வரையறுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவு 3 சொல்வது:
(3) Offence of money-laundering - Whosoever directly or indirectly attempts to indulge or
knowingly assists or knowingly is a party or is actually involved in any process or activity connected with the [proceeds of crime including its concealment, possession, acquisition or use and projecting or
claiming] it as untainted property shall be guilty of offence of money-laundering.
தமிழில்: குற்றத்துடன் தொடர்புடைய வருமானத்தை மறைத்தல், உடைமையாக்குதல், கையகப்படுத்துதல், பயன்படுத்துதல், வேறு நோக்கில் திட்டமிடுதல் ஆகியவையும் பணமோசடி செய்த குற்றத்திற்கு உள்ளாகும். இந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத பணபறிமாற்ற தடைச் சட்டத்தின் 4வது கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என அமலாக்கத்துறை கூறுகிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் பிரிவு 4 சொல்வது :
(4) Punishment for money-laundering.—Whoever commits the offence of money-laundering shall
be punishable with rigorous imprisonment for a term which shall not be less than three years but which
may extend to seven years and shall also be liable to fine Provided that where the proceeds of crime involved in money-laundering relates to any offence
specified under paragraph 2 of Part A of the Schedule, the provisions of this section shall have effect as if
for the words “which may extend to seven years”, the words “which may extend to ten years” had been substituted.
தமிழில்: பிரிவு 3ன் கீழ் பதிவான வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு குறையாத, 7 ஆண்டுகளுக்கு மிகாத கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். அதேசமயம் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான வழக்கின் பிரிவுகள் இந்த சட்டத்தின் பார்ட் ஏ-வில் வரும்பட்சத்தில் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது.
செந்தில் பாலாஜி மீது (2015, 2017, 2018ஆம் ஆண்டுகளில்) சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளில் உள்ள பிரிவுகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் அட்டவணையில் பார்ட் ஏ-ல் வருவதால், அதிகபட்சமாக அவருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.