உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் MSME பெற்ற பலன்கள் என்ன? தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிலை என்ன?

நாட்டின் பொருளாரத்தை உயர்த்துவதில் முதுகெலும்பாக திகழ்வது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைதான். அந்தவகையில், இத்துறைக்கு உலக முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.. பார்க்கலாம்.

பரவலான வளர்ச்சியை பதிவு செய்ய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்துறையில்தான் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. எனவே இந்த நிறுவனங்களை தொடங்கவும், தடையின்றி செயல்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றன. குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை தொடங்க தமிழகத்தில் 10 வகையான மானியங்கள் வழங்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரத்து 182 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 824 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க 3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் ரூபாய் வங்கிக்கடனுதவி வழங்கப்பட்டு 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் தர வரிசையில் இந்தியாவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு தற்போது 3ஆம் நிலைக்கு முன்னேறி முன்னோடி இடத்தை பிடித்துள்ளது. மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை இரண்டரை ஆண்டுகளில் 3.5 மடங்கு அதிகரித்து 7 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நிறுவனங்களுடன் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், 174 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களிடமிருந்து சுமார் 42 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 73 பேர் முதல்முறை ஏற்றுமதியாளராக மாற உலக முதலீட்டாளர் மாநாடு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com