சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை 515 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தொழிற்சாலை மூலம் 446 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையத்தில் 12,082 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் 40,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. பெகட்ரான் நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையத்தை ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஎஸ்டபிள்யு ரெனியுவல் நிறுவனம் 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. டிவிஎஸ் குழுமத்தின் சார்பில் பல்வேறு திட்டங்க்ளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் பெட்ரோல் கார்கள் மற்றும் மின்சார கார், மின்கலன்கள் உற்பத்தி மற்றும் ஐஐடியுடன் இணைந்து ஹைட்ரஜன் புத்தாக்க பள்ளத்தாக்கு அமைக்க 6,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
செல்போன் சிப்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற குவால்காம் நிறுவனம் சென்னையில் 177. 27 கோடி ரூபாய் முதலீட்டில் வடிவமைப்பு மைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமை சேர்ந்த வின் ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி மையத்தை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தீர்வுகள், தமிழகம் முழுவதும் சர்வதேச திறன் மையங்கள் அமைப்பதற்கு ஏபி மோலெர் மேர்ஸ்க் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
மிட்சுபிசி எலெக்ட்ரிக் நிறுவன்ம் குளிர்சாதன் கருவிகள் தயாரிப்பு தொழிற்சாலையை 200 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இதன் மூலம் 50 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் காஞ்சிபுரத்தில் 5,600 கோடி ரூபாய் மதிப்பில் சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.