திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு - பஞ்சாமிர்தத்துக்கு ஏன் இல்லை ? உயர்நீதிமன்றம் கேள்வி

திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு - பஞ்சாமிர்தத்துக்கு ஏன் இல்லை ? உயர்நீதிமன்றம் கேள்வி
திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு - பஞ்சாமிர்தத்துக்கு ஏன் இல்லை ? உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோவிலுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பதில்தரவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில்"பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு ஆண்டுதோறும் 70 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பழனி நகராட்சியில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை 1 லட்சமாக இருந்தது. தற்சமயம் மக்கள் தொகை அதிகரித்த நிலையிலும் ,பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாததால் ,  பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பலர் பழனி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ,பேருந்து நிலையம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்து இருப்பதால் பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பழனியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த 2013 ம் ஆண்டே மனு அனுப்பினேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழகம் முதல்வர் உள்பட அதிகாரிகள் அனைவருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சிறப்பு வாய்ந்த முருகன் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவிலின் சிறப்புகளை காக்கவும் எந்த நடவடிக்கையும் இல்லை. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழமைவாய்ந்த பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு இன்னும் வழங்கப்படவில்லை.

அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பழனி கோவிலுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்து அறநிலையத்துறை ஆணையர்,பழனி முருகன் கோவில் இணை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com