மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த மாதம் விவசாய வேலைக்காக சென்னை வந்துள்ளனர். சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்த இவர்கள், மூன்று நாள் வேலை முடித்தபின், அடுத்த வேலை இல்லாததால் சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 13 ஆம்தேதி சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து படுத்து உறங்கியுள்ளனர். 16 ஆம்தேதி காலை வரை சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பார்மில் தங்கி இருந்த இவர்களில் 5 பேர் உணவு இல்லாமல் மயங்கி விழுந்துள்ளனர்.
இவர்களை ரயில்வே காவல்துறையினர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் மேற்குவங்க மாநிலம் West Midnapore, Mangrul பகுதியைச் சேர்ந்த சமர்கான் , மாணிக் கோரி , சத்யா பண்டிட் , ஆசித் பண்டிட், கோனாஸ் ஸ்மித் என தெரிய வந்தது. இவர்களில் 4 பேர் சில தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த சமர்கான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
35 வயதாகும் சமர்கானுக்கு மனைவி இரு மகன்கள் உள்ளனர். வறுமையில் வாடும் குடும்பத்தின் பசியை போக்க, வாழும் வழிதேடி சென்னை வந்த சமர்கான் இனி வாழவே முடியாத
இடத்திற்குச்சென்றுவிட்டார். ஏழ்மை நிலையில் உள்ள இவரது குடும்பத்தினர் உடலை பெறும் வழிதெரியாமல் தவித்த நிலையில், இவர்களுக்கு செயற்பாட்டாளர்கள் சிலர் உதவிக்கரம்
நீட்டியுள்ளனர்.
இத்தொழிலாளர்கள் பட்டினியோடு இருப்பதை யாரும் அறிந்திருந்தால் நிச்சயம் உதவியிருப்பார்கள் என்று தொலைபேசியில் புதியதலைமுறையிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இத்தொழிலாளர்களைப்போல பல வெளிமாநிலத்தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்களை நம்பி இங்கு வந்து வேலை செய்யும் நிலையில், அவர்களுக்கான வேலை, உணவு உறுதி செய்யப்படாத சூழல் நிலவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு வளர்ச்சியிலும், பொருளாதார சூழலிலும் முன்னணியில் உள்ள மாநிலம் என்பதோடு, இலவச அரிசி உள்ளிட்ட பலத்திட்டங்களால் யாரும் பட்டினியோடு இருக்க இயலாத நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கும் மாநிலம். இங்கு வெளிமாநிலத் தொழிலாளர் பட்டினியால் உயிரிழந்தது பெரும் துயரமே.
இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.