தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளியைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு தாம்பூலத் தட்டுடன் சென்று மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்களிடம் அழைப்பு விடுக்கின்றனர்.
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியாக பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் நுண்ணறை வகுப்புகளும் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 17ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் டூ வகுப்புகள் வரை மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களைச் சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அப்போது தாம்பூலம் தட்டு, வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்த துண்டுப் பிரசுரத்தையும் வழங்கி பெற்றோர்களிடம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க அழைப்புவிடுப்பது மக்களிடம் பாராட்டுக்களைக் குவித்துவருகிறது.
புகைப்பட நன்றி: தினத்தந்தி