மருத்துவம், பொறியியல் படித்த திருமணமாகாத மற்றும் கணவரை இழந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அவர்களிடம் இருந்து 9 கோடி ரூபாய் பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவ அதிகாரிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சக்கரவர்த்தி என்ற இளைஞர் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த தான் மருத்துவர் என்றும் அமெரிக்காவில் பணிபுரிவதாகவும் கூறி அந்தப் பெண்ணிடம் பழகியுள்ளார். சில நாள் கழித்து இந்தியா வந்துவிட்டதாகக் கூறி அந்தப் பெண்ணை நேரில் சந்தித்துள்ளார். தனது தாயார் மறைந்துவிட்டதால் ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்யப்போவதாகக் கூறி பெண் மருத்துவ அதிகாரியிடம் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சக்கரவர்த்தி திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதும் சரவணன், அஜய், விஜய்குமார், வித்யூத் போன்ற போலி பெயர்களில் திருமணமாகாத மற்றும் கணவரை இழந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் மூலம் பெண்களிடம் பழகி அவர்களின் பின்னணியை தெரிந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல் 9 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் 9 கோடி ரூபாய் மோசடி செய்து ஆடம்பர பங்களாக்கள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்கரவர்த்தியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.