“ஊரடங்கால் வறுமையில் சிக்கித்தவிக்கிறோம்”: 82 வயது நெசவுத் தொழிலாளர் வேதனை...!

“ஊரடங்கால் வறுமையில் சிக்கித்தவிக்கிறோம்”: 82 வயது நெசவுத் தொழிலாளர் வேதனை...!
“ஊரடங்கால் வறுமையில் சிக்கித்தவிக்கிறோம்”: 82 வயது நெசவுத் தொழிலாளர் வேதனை...!
Published on

ஊரடங்கு உத்தரவால் வருமானம் இன்றி வறுமையில் சிக்கித்தவிப்பதாக நெசவுத் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலகப் புகழ்பெற்ற கண்டாங்கி சேலை நெய்யும் தொழிலாளர்கள் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவால், வருமானம் இன்றி, பசி, பட்டினியோடு, வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில்  ஊரடங்கு உத்தரவில் சிக்கி, அன்றாட வாழ்க்கையோடு போராடி வரும் காரைக்குடியை சேர்ந்த ஹரிராம் என்ற முதியவரும் ஒருவர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை செக்கடி நெசவாளர் காலனியில் வசிப்பவர் ஹரிராம். இப்பகுதியில் சுமார் 2000 ற்கும் மேற்பட்ட நெசவாளர்கள கண்டாங்கி சேலை நெய்யும் தொழில் செய்து வருகின்றனர். 82 வயதான ஹரிராம் என்பவரும் தனது குடும்புத்தினருடன் இத்தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆவுடையம்மாள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வரும் ஹரிராம், தனது தாய், தந்தை கற்றுக் கொடுத்த பரம்பரை தொழிலான நெசவு தொழிலை தனது 18 வயது முதல் செய்து வருகிறார்.

கடந்த காலங்களில் நெசவுத் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், அரசு இத்தொழிலை கண்டு கொள்ளாததால், சிறுக, சிறுக தொழில் நலிவடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இரண்டரை நாட்கள் செலவழித்து உருவாக்கும் ஒரு கண்டாங்கி சேலைக்கு 500 ரூபாய் மட்டுமே கூலியாக கிடைப்பதாக ஆதங்கம் தெரிவிக்கிறார் ஹரிராம். வேறு தொழில் தெரியாததால் குடும்பத்தை நகர்த்த இத்தொழிலை விட்டால் பிழைப்பிற்கு வேறு வழி இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவிக்கின்றார்.

இத்தனைக்கும் கண்டாங்கி சேலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இருப்பினும், தற்போது, உலகெங்கும் கொரனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், கண்டாங்கி சேலை நெய்யும் தொழிலாளர்கள், எந்தவித வருமானமும் இன்றி, தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றார். இதனால் ஊரடங்கு உத்தரவு என்று விலக்கிக் கொள்ளப்படுமோ, என்று, மிகுநத எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார் முதியவர் ஹரிராம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com