மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆடைகளைத் தயாரிப்பவர்கள் நெசவாளர்கள். ஆனால் தொடர் மழையால் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள் இந்த சாமானியர்கள்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. அவற்றில் நெசவுத் தொழிலும் ஒன்று. நெசவுக்கு பயன்படும் பெரும்பாலான உபகரணங்கள் மரத்தாலானதால், ஈரப்பதம் காரணமாக அவை தொழிலுக்கு ஒத்துழைப்பதில்லை என்று நெசவாளர்கள் கூறுகின்றனர். கூலிக்கு வேலை செய்யும் ஏராளமான நெசவாளர்கள் குடிசை அல்லது ஓட்டு வீடுகளிலேயே வசிக்கின்றனர். இந்த நிலையில் தறிக்காக போடப்பட்ட பள்ளத்தில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பட்டு நெசவாளர்களின் பாடு இன்னும் திண்டாட்டம். குடும்பத்தில் 4 பேர் சேர்ந்து உழைத்தாலே அதிக பட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டலாம் என்கிற நிலையில் மழைக்காலத்தில் அதற்கும் வழியில்லை என்கிறார்கள் நெசவாளர்கள். கறை பட்டுவிடும், பட்டுக்கு பங்கம் வந்துவிடும் என்பதற்காக வேலை கொடுக்க பல முதலாளிகள் முன்வருவதில்லை என்றும் சொல்கிறார்கள் இந்த சாமானியர்கள்.
தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக, நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும் பட்டுப்போன நிலையில் இருக்கும் பட்டு நெசவாளர்களையும், கைத்தறியை நம்பியிருப்பவர்களை கைவிட்டுவிடக் கூடாது என்றும் ஆடை செய்பவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் கோரிக்கைகள் குறித்து புதிய தலைமுறையின் நியூஸ் 360 விவாதத்தின் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கீழே உள்ள வீடியோ பார்க்கலாம்..