வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும்போது 30 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக மழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே சென்னையில் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் 3 பேரிடர் மீட்புப்படை உள்ளது என அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாக தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும், இன்று இரவிலிருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது எனவும் கூறியிருக்கிறார். தொடர்ந்து வீட்டில் ஆதார், ரேஷன், கல்விச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.