"தாய் மொழியிலே சிந்திப்போம், தாய் மொழியிலே பேசுவோம், தாய் மொழியிலே வழக்காடுவோம், தாய் மொழியிலே நீதிவழங்குவோம்" என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி கடந்த 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், மாநில அளவில், 22 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த 66 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் நீதிமன்றத்தில் வாதாடுவது போன்று மாணவர்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதற்கான நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா பங்கேற்று போட்டியில் முதலிடம் பெற்ற தேனி அரசு சட்டக் கல்லூரி, இரண்டாம் இடம் பிடித்த விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, கல்லூரி முதல்வர் கௌரி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு டி.ராஜா பேசுகையில், “ஜப்பான் உலகத்திலே ஒரு வல்லரசு நாடாக உருவாவதற்கு காரணம் அந்த நாட்டு மக்கள் சொந்த தாய் மொழியில் பேசுகிறார்கள். எனவே தாய் மொழிலேயே நாம் ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கும் பொழுதும், கலந்து ஆலோசிக்கும் போதும் பிரச்னை வருவது கிடையாது. அப்படி பிரச்னை வந்தாலும் சாதாரண முறையில் நாம் அதை தீர்வு கொள்ள முடியும்.
தமிழில் பேசுவதாலும், வழக்காடுவதாலும், தமிழில் தீர்ப்புரைகளை தருவதாலும் எல்லாருக்கும் நன்மை கிடைக்கும். தமிழில் சிந்தித்து பேசுகிறபோது நல்ல அற்புதமான சிந்தனைகள் கருத்துக்கள் கிடைக்கும். அந்த கருத்துக்கள் கிடைக்கிற போது உங்களுடைய பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். எனவே, நாம் தமிழிலேயே பேசுவதற்கான முயற்சிகளை எடுப்போம். நீங்கள் அறிவோடு இருந்தால் அழகாக இருப்பீர்கள்.
சொந்த மொழியான தாய் மொழியிலே சிந்திப்போம், தாய் மொழியிலே பேசுவோம், தாய் மொழியிலே வழக்காடுவோம், தாய் மொழியிலே நீதி வழங்குவோம்” என்று பேசினார்