அணைக்கரை விவசாயி இறப்பு விவகாரத்தில், வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என அவரது மகள் வசந்தி பேட்டி அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயியான அணைக்கரை முத்து என்பவர் அவரது வீட்டின் பின் பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். தோட்டத்தை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க அவர் மின்வேலி அமைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரை கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் விசாரணையில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.
விவசாயின் இறப்புச் செய்தியைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிகாரிகள் தாக்கியதால்தான் முத்து இறந்ததாகக் கூறி, அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வந்தனர்.
இந்நிலையில் முத்துவின் மகள் வசந்தி அப்பாவின் உடற்கூறு ஆய்வு எங்களுக்கு தெரியாமலேயே நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது “எங்களுக்குத் தெரியாமலேயே உடற்கூறு ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்தும் போது உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் தருவதாக தெரிவித்தார்.
ஆனால் எங்களுக்கு இதுவரை பிரேத பரிசோதனை குறித்த எந்தத் தகவல்களும் தரப்படவில்லை. ஆகவே வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் “என்று கூறிய நிலையில் அவருடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.