காந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை சத்யம் திரையரங்கில் ஹேராம் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார் கமல். அதில் " காந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.இன்று இருக்கக் கூடிய நிலையில் தராசிற்கு முள்ளே இல்லை. அரசியலுக்கு வரவேண்டாம் என்று ‘ஹேராம்’ படத்தை இயக்கும்போது நினைத்தேன். ஆனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கிருந்து என்பதை ஹேராம் படத்தை பார்த்தாலே தெரியும்" என்றார்.
மேலும் தொடர்ந்த கமல்ஹாசன் "ஆசைக்கும் வியாபாரத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஹே ராம் திரைப்படம் ஆசைப்பட்டு செய்யப்பட்டது. வியாபாரமாக நினைத்து செய்திருந்தால் ஹேராம் போன்று 50 படங்கள் தயாரித்து இருப்பேன். ஹேராம் படத்துக்கு முதலில் இசையமைக்க இளையராஜா வேண்டாமென நினைத்தேன். பின்னர் வேறு சில இசையமைப்பாளர்களை அணுகினேன். பின்னர் காந்தியை வைத்து படம் செய்யும்போது சத்தியாகிரகம் தான் செய்ய வேண்டும். அதனால் திரும்பவும் இளையராஜாவையே அணுகினேன். அவரும் பணிவுடன் ஏற்றுக்கொண்டார் என்றார் அவர்.