ஆளுநர் குறித்த அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆளுநர் குறித்த அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆளுநர் குறித்த அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

ஆளுநர் குறித்து திமுக மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். முதல்வர் இது போன்ற பேச்சுகளை ஆதரிக்க மாட்டார் எனக் கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் கணினி கல்வியகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், ''தை முதல் நாளினை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தற்கு பல காரணங்கள் உண்டு. மறைமலை அடிகளார் போன்ற 500 தமிழ் அறிஞர்கள் கூடி தை முதல் நாள் தமிழ்நாடு என தீர்மானம் நிறைவேற்றினார்கள். தமிழர் திருநாள் என்றால் தமிழ்ப் புத்தாண்டு என்று பொருள். அதனால் தமிழ் புத்தாண்டு என குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரிப்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிந்து செய்தாரோ தெரியாமல் செய்தாரோ தெரியவில்லை. தற்போது அதிமுகவிற்கு 60 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒருவேளை மீண்டும் தேர்தல் நடந்தால் அவர் இயக்கத்திற்கு ஒன்றுமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக மேடையில் ஒருவர் அநாகரிகமாக பேசினால் அது வருந்தக்கூடியது. இது போன்ற செயல்களை முதல்வர் எப்போதும் ஆதரிகமாட்டார். பேச்சாளர்கள் நாகரிகம் கருதி அரசின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும். யாரோ ஒரு பேச்சாளர் பேசப்பட்டதற்கு ஆளுநர் மாளிகையை ஒரு புகார் அளித்துள்ளது விந்தையாக உள்ளது. மற்ற கட்சிகளில் உள்ள பேச்சாளர்கள் 100% நபர்கள் அநாகரிகமாக தான் பேசுகின்றனர். அவர்களை அந்தந்த கட்சிகள் கண்டிப்பது இல்லை. திமுகவில் பல பேச்சாளர்கள் நடுவில் இது போல் ஒருவர் பேசியதற்கு வருந்துகிறோம். ஆளுநர் குறித்து பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா என தெரியவில்லை.

நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ்நாடு மக்களின் நிலைப்பாடு. பாஜக தலைவர் நீட் வேண்டும் என கூறினால் அவர் தமிழ்நாடு மக்களுக்கு எதிராக உள்ளார் என பொருள். தமிழ்நாட்டின் நிலவரங்களை முழுமையாக தெரிந்தால் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவிக்க மாட்டார். எனவே அவர் கருத்து சொல்லும் முன் தமிழ்நாட்டின் நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் மீது கட்டுப்பாடு இல்லாததால் பரவியது. இன்று சவால் விட்டு சொல்கிறோம். தமிழ்நாட்டில் எங்காவது கஞ்சா பயிரிடுதல் இருந்தால், தகவல் தெரிவிப்பவர் ரகசியம் காட்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு எடப்பாடி தயரா? தமிழ்நாடு காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில் ஆந்திர காவல்துறை 4000 ஏக்கரில் கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் வழியாக போதை பொருட்கள் ஊடுருவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி ஆட்சியில் தான் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் கிடைத்தது'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com