நடுரோட்டில் ஸ்டண்ட் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்கள் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, “தவறுதலாக செய்துவிட்டோம், இனி இப்படி செய்யமாட்டோம்” என இளைஞர்கள் மன்னிப்பு கேட்கும் புது வீடியோ வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள சாலையில், வாகன ஓட்டிகள் முன்பு நடுரோட்டில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் ஸ்டண்ட் செய்த அந்த இளைஞரை போக்குவரத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து வீடியோவில் பதிவான முக அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தி, ஸ்டண்ட் செய்த இளைஞர் மற்றும் வீடியோ பதிவு செய்த இளைஞர் என மொத்தம் 3 பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து பிடிப்பட்ட அந்த இளைஞர்கள் தெரியாமல் லைக்குக்காக அதை செய்துவிட்டதாகவும், இனி இதே போன்று செய்ய மாட்டோம் என்றும் மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் யாரும் இது போன்று பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் அந்த மூன்று இளைஞர்களையும் எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.