“ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசுவதில் என்ன தவறு?” - தேமுதிக சுதீஷ்

“ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசுவதில் என்ன தவறு?” - தேமுதிக சுதீஷ்
“ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசுவதில் என்ன தவறு?” - தேமுதிக சுதீஷ்
Published on

தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம் என்றும் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் தேமுதிக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணிக்கு வர தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதற்கு அதிமுக மறுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷும் கலந்துகொண்டார். இதனால், கூட்டணி அறிவிப்பு  வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தேமுதிக நிர்வாகிகளான இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட சிலர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரை முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனைக்குப் பின் பேசிய துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகள் சிலர் வீட்டிற்கு வந்தனர். உங்களோடு கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தனர். ஏன் அங்கிருந்து வர விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அதற்கு சரியான பதில் இல்லை. ஏதோ தவறாக இருப்பதாகப்பட்டது. கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்

இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம் என்றும் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம் என்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் தொகுதிப் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது எங்களுடைய தொகுதி பங்கீட்டை உறுதி செய்திருக்கலாம் என்பது எங்கள் வருத்தம். திமுக மற்றும் அதன் தலைமை குறித்து துரைமுருகன் என்னிடம் பலவற்றை பேசினார். அதை என்னாலும் கூற முடியும். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அதை வெளிப்படுத்தமாட்டேன் என்று தெரிவித்தார். மேலும் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேசுவதில் என்ன தவறு? அதில் தவறு ஒன்றும் இல்லையே என்றார்.

சுதீஷ் கருத்துக்கு பதில் அளித்துள்ள துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ளவே மாற்றி பேசுகிறார்கள். அவர்கள் இப்படி மாற்றி மாற்றி பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. தேமுதிகவினர் நொந்து போய் உள்ளனர். அவர்களை நான் துன்புறுத்தவில்லை. தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசுவதற்கு அவர்களிடம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com