கவனக்குறைவுடன் ஊழியர்கள் பணி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது மன்னிக்க முடியாத குற்றம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை கொடுங்கையூரில் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடல்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். அந்தச் சிறுமிகளின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கவனக்குறைவுடன் பணி செய்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பாடமாக அமையும். அப்பகுதியில் இன்னும் மின்கசிவு இருப்பதாகவும், மின்வாரிய ஊழியர்கள் தொலைபேசி அழைப்பை எடுப்பதில்லை எனவும் மக்கள் கூறுவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, இன்றைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இந்நிலையில், மின்வாரிய ஊழியர்கள் மின்பெட்டிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.ஆர். நகர்ப் பகுதியில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் உயரழுத்த மின் கேபிள்கள் சாலையில் வெளியே தெரியுமாறு கிடப்பதையும், மின்பெட்டிகள் திறந்த நிலையில் ஆபத்து நிறைந்ததாக இருந்தது குறித்தும் புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கேபிள்களை பூமிக்கடியில் புதைப்பதோடு, மின்பெட்டிகளை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேசிய மின்வாரிய அதிகாரி, மாநகராட்சி அனுமதி கிடைக்க தாமதமானதால்தான் மின்வயர்களை வெளியே போட்டு வைத்ததாகவும், இன்றைக்குள் பணிகளை முடித்து விடுவோம் என்றும் கூறினார்.