7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்மானம் எந்த நிலையில் உள்ளது எனவும், ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். ஆளுநர் பதவி மாநிலத்திற்கு தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 7 பேரின் விடுதலை தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் துணை முதலமைச்சர் பதிலளித்தார். மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறினார்.