"கட்சி பெயரை சொல்லி அடமான சொத்தை தராமல் மிரட்டுறாங்க”- பெண் புகார்

"கட்சி பெயரை சொல்லி அடமான சொத்தை தராமல் மிரட்டுறாங்க”- பெண் புகார்
"கட்சி பெயரை சொல்லி அடமான சொத்தை தராமல் மிரட்டுறாங்க”- பெண் புகார்
Published on

கோவையில் அடமானக்கடன் என்ற பெயரில் 2.5 கோடி மதிப்புடைய சொத்தை, அபகரிக்கும் நபர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு கோவை மாநகர் காவல் ஆணையாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு சொந்தமான சொத்து கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ளது. சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்தின் பேரில், செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக 2020-ஆம் ஆண்டு பெருந்துறையை சேர்ந்த ஆடிட்டர் மாணிக்கம் என்பவரிடம் 11 லட்சம் ரூபாய் அடமான கடனாக பெற்றுள்ளார்.

இந்நிலையில், மூன்று மாதம் கழித்து வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்த திலகவதி சென்றுள்ளார். அப்போது கடன் தொகையான 11 லட்சத்துக்கு பதில் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் சொத்து பத்திரங்களை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த திலகவதி "முறையாக நான் பெற்ற தொகையை தந்து விடுகிறேன்; எனது சொத்து பத்திரங்களை திருப்பித் தாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

இதற்கு மாறாக சுரேஷ், ஆடிட்டர் மாணிக்கம் மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மகுடபதி சிவகுமார் ஆகியோர் திலகவதியை மிரட்டி அவரது வீட்டை பூட்டியதோடு திலகவதியிடம் 50 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக அவர்களை அணுகினால்  சுரேஷ், மகுடபதி, சிவக்குமார் ஆகியோர் "திமுகவை சேர்ந்த எங்கள் மீது உன்னால் எங்கு போனாலும் நடவடிக்கை எடுக்க முடியாது" என மிரட்டி திலகவதியை தாக்கவும் செய்துள்ளனர்.

இதனிடையே தனது வீட்டில் இரவு நேரஙகளில் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் தனது வீட்டை மீட்டுத் தருமாறு கோவை சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகார் அளித்துள்ளார் திலகவதி. புகாரின் பேரில் மனு ரசீது அளித்துள்ள காவல் துறையினர் அதனைத்தொடர்ந்து எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் தனது சொத்தை மீட்டுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று தனது உறவினர்களுடன் வந்து திலகவதி புகார் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com